யார் அவன்
கிழிந்த உடையோடு இருந்தும்
அவன் சிரிக்கிறான்
எந்த ஏளன பேச்சையும் அவன்
கண்டுகொள்வதே இல்லை
உண்கிறான் உறங்குகிறான்
பிதற்றுகிறான்
ஏதுமற்று கிடந்தாலும்
எல்லாம் கிடைத்தது போல்
இருக்கிறான்
அமைதி தேடி ஓடியது இல்லை அந்த ஆலமரத்தடியை தாண்டியதில்லை
சிலசமயம் பொறாமையாக உள்ளது
பலசமயம் பைத்தியமாய் தோன்றுகிறது
பரவசம் என்கிறான் தன்னை
பரதேசி என்கிறான்
உயர்வை எண்ணி மகிழ்வதில்லை
தாழ்வாய் என்றும் எண்ணுவதில்லை
கூட்டம் கூடுகிறது இருந்தும்
வசூலிப்பதில்லை
பசி எடுத்தால் எப்பா இரண்டு
இட்லி வாங்கி கொடு என்கிறான்
போகும் போதெல்லாம் வாபா என
அழைத்து வேதாந்தமா வேதாளமா என அறியாத படி ஆரூடம் சொல்கின்றான்
பிறப்பை தன்னைவிட உயர்வாய்
வாழ்பவன் யார் என பெருமைப்படுகின்றான்
பிச்சைக்காரனா இல்லை இவன் வேறுபட்டு தெரிகின்றான்
சோம்பேறியா இல்லை இவன்
பல செடிகளை நடுகின்றான்
ஆன்மீகவாதியா இல்லை இவன்
ஆட்களை அடித்தே விரட்டுகின்றான்
பைத்தியமா இல்லை இவன் என்னால் உணரமுடியாதவற்றையும் அழகாய் சொல்கின்றான்
விஞ்ஞானமும் சொல்கின்றான்
மெய்ஞானமும் சொல்கின்றான்
புத்தனா சித்தனா பித்தனா
மூன்றுமானவனா எதுவோ
புதிதாய் புதிராய் இருக்கின்றாய்
உண்மையில் நீ யாரோ......?