நாம் பிறந்த பயன்

குழந்தை பாலப்பருவம்
தெய்வத்தின் சாயலில்
நம் குலத்தைக் காக்கும்
கருணை வடிவம்
அதின் கண்களிலோ களங்கமில்லை
தெளிந்த நீரோடை போல் பார்வை
அதில் துளி கூட துயரம் இல்லை
தூய்மையின் இருப்பிடமே
அதன் உள்ளத்தின் மேன்மை
இதற்காகத் தானே தவமிருந்து
கேட்கின்றோம் குழந்தை வரம்
அது இல்லாத வீடு சாக்கடை போல்
ஆண்டவன் அருளும் அற்புத கொடை
நாம் பெற்றெடுக்கும் குழந்தைகளே
அவற்றால் நாம் அடையும் ஆனந்தம்
வேறு எவற்றாலும் கிடைத்திடாது
நாம் செய்யும் நன்மைகள் தான்
குழந்தைகளாகப் பிறக்கின்றன
ஒவ்வொரு குழந்தையும்
உலகத்தில் கிடைத்தற்கு அரிய
தேடிட முடியா செல்வங்கள்
அவை நம் வாழ்வை அர்த்தம் உள்ளதாக்கும்
நாம் பிறந்த பயனை அடைவது
இந்த அருட் கொடையாம் குழந்தைகளால்தான்
இல்லை என்றால் நாம் வெறும் நடைப் பிணங்களே
நாம் வாழ்ந்தோம் என்பதன் அர்த்தம்
குழந்தைகள் என்னும் செல்வங்களே
அவற்றின் குறுகுறு பார்வையும்
துரு துரு சின்ன நடையும்
மழலை மொழியும் எத்தகையோரையும்
தன் பக்கம் இழுத்து விடும்
இது போதும் நமக்கு இவ்வுலகில்
வேறென்ன வேண்டும்
நாம் பிறந்த பயனை அடைந்து விட்ட
மகிழ்ச்சியில் ஆடிப்பாடி
ஆனந்தமாய் வாழ்ந்திருப்போம்