புத்தர் சிரிக்கிறார்….

அவசரமாய்
அலுவலகத்திற்கு
கிளம்புகையில்
உண்பதற்காய்
தட்டிலெடுத்த
கைப்பிடிச்சோற்றில்
ஒருபங்கை
கொல்லைப்புறத்தில்
கரைகின்ற
காக்கைக்கும்
பகிர்ந்துகொடுக்கையிலும்

வியர்வை நாற்றத்தோடு
பேருந்து நெரிசலில்
வீடு திரும்புகையில்
மூச்சு திணறும்
கர்ப்பிணிப்பெண்ணிற்கு
இருக்கையை
கொடுத்துவிட்டு
வெளவாலாய்
கம்பியில்
தொங்கிக்கொண்டு
பயணிக்கையிலும்...


மாதந்திரசெலவுக்கே
சம்பளம் போதாமல்
பால்காரனுக்காய்
பக்கத்துவீட்டில்
வாங்கியிருந்த கடனிலும்
பசிக்குது சாமி...
நாலு நாளாச்சு சாப்பிட்டென்று
கையேந்துகிற
பெரியவருக்கு
பத்துரூவாய்தாளை
தயங்காமல்
நீட்டையிலும்....


அப்பாவின்
தற்கொலை
மிரட்டலுக்காய்
உயிர்க்காதலையே
தியாகம்செய்தாலும்
மறக்காமல்.....
பிறக்கின்ற குழந்தைக்கு
காதலனின்
பெயரையே
சூட்டுகிறபோதும்....


காக்கையாய்..
கர்ப்பிணியாய்..
பிச்சைக்காரனாய்..
காதலாய்....
இன்னும்
வேறுவேறாய்..
எல்லாமே
போதிமரங்கள்தான்

மனிதம் தாண்டுகிற
அந்த தருணங்களிலெல்லாம்
உங்களுக்குள்ளும்.....
ஒளிந்திருக்கிற
புத்தர் சிரிக்கிறார்
சத்தமேயில்லாமல்.....!!!!!

எழுதியவர் : muruganandan (21-Apr-11, 1:17 pm)
பார்வை : 438

மேலே