மீண்டும் அவள்

எழுத்து இணையத்திற்கும், அதில் அற்புதமாய் படைப்புகளை சமைத்துக்கொண்டிருக்கும் படைப்பாளிகளுக்கும், அறிந்தோ அறியாமலோ, விரும்பியோ விரும்பாமலோ, நாடியோ நாடமலோ எதோ ஓர் விதத்தில் இந்த இணையத்தில் வந்து வாசித்துவிட்டு போகும் வாசகர்களுக்கும், வாசகர்கள் போர்வையில் இருக்கும் படைப்பாளிகளுக்கும் இந்த சின்னப் பையனின் பெரிய வணக்கம். ஓர் தொடர் கதையை (சிறுகதையா பெருங்கதையா என முடிவு செய்யவில்லை) எனது குட்டி கற்பனை ஆற்றலை கொண்டு எழுத திட்டமிட்டுள்ளேன். தொடர்ந்து எழுத எழுத இயலுமா என்பது சந்தேகமே, எனினும் அவ்வப்போது எழுதி முழுமைபடுத்துவேன் என்ற உறுதிமொழியை அளிக்கின்றேன். இது எனது முதல் கதை, முதல் பயணம், முதல் பிரசவம், முதல் காதல், எப்படி இருக்கும் என்று எனக்கே தெரியாது. நீங்கள் தான் பார்த்து படித்து சகித்துக்கொள்ள வேண்டுமென வேண்டுகிறேன். உங்களின் மனதில் பட்டதை அப்படியே எனக்கு அறிவுரையாக வழங்குங்கள். பிழைகளை திருத்திக்கொண்டும் குறைகளை நிவர்த்தி செய்துகொண்டும் பயணிக்க உதவியாய் இருக்கும்... நன்றி ....

மீண்டும் அவள் ! (பகுதி 1)

ஓர் சாதாரண பயணத்தின் பொழுதுதான் அவளை சந்தித்தேன். சுமார் பத்து பயணிகள் மட்டுமே பயணிக்கக் கூடிய பங்குத் தானி ( ஷேர் ஆட்டோ ) அது. வாகனம் செல்லும் அதே திசை நோக்கி அவள் அமர்ந்திருந்தால். அவளுக்கு நேரெதிரே நான் அமர்ந்திருந்தேன்.
தினமும் பங்குத் தானி ( ஷேர் ஆட்டோ ) தான் பயணிப்பேன் அப்பொழுது பல பெண்களோடு பயணிக்க நேரிடும். சில நேரங்களில் அருகில் நெருக்கமாக அமர்ந்தும் பயணிக்க நேரிடும். அப்போதெல்லாம் ஏற்படாதா ஓர் உணர்வும் புது மாற்றமும் அவளுக்கு எதிராக அமர்ந்து அவளது அழகை பார்த்துக் கொண்டே பயணிக்கும் பொழுது ஏற்பட்டது. ஏதோ தெரிந்தவர்களோடு சுற்றுலா செல்வதை போல் உணர்ந்தேன்.

‘என்ன பொண்ணு டா இவ’ என சொல்லத் துடித்த நா வை அடக்க முடிந்தாலும், மனதை அடக்க முடியவில்லை. மீண்டும் மீண்டும் ‘என்ன பொண்ணு டா இவ’ என்றே மனசு முணுமுணுத்தது.
உடலில் சற்று வெப்பம் கூடியது. எதோ ஒன்று உடலில் உள்ள ஆற்றலையெல்லாம் உறிஞ்சியதைப் போல் இருந்தது. அவளை பார்க்க மனம் ஏங்கினாலும் ஏறிட்டு பார்க்க சங்கடமாக தோன்றியது. பாராமலும் இருக்க முடியவில்லை. மனதில் காதல் மரம் ஊன்றி கொடியென அவளின் நினைவுகளை அதில் படரவிட்டேன். ஒரு வழியாக மனதில் தைரியத்தை வரவைத்துக் கொண்டு உச்சந்தலை முதல், முன் பாதம் வரை பார்வையிட்டேன். எல்லையில்லா ஆனந்தம். உச்சந்தலையில் பொட்டில்லை, காலில் சுட்டியில்லை. திருமணம் ஆகாத தேவதைதான்.

கலைந்துபோன அவளின் கூந்தலை கண்டு
கட்டிபோட்டிருந்த என் மனமும் கலைந்தே போனது !

கார்முகில் கூந்தலும் அந்திநேர இளந்தென்றலும் இன்பமாய் விளையாட இடையிடையே பிஞ்சு விரல்கள் தடைபோட, என்னே அந்த பொழுது வர்ணிக்க முடியாத வறுமையில் மூழ்கிவிட்டேன்.

வயதென்ன இருக்கும் ? பதினெட்டு, பத்தொன்பது, மிஞ்சி போனால் இருபத்தி ஒன்று இருக்குமா? ஆம் அவ்வளவு தான் இருக்கும் என்ற முடிவுக்கு வந்தேன். எல்லாம் மறந்து போன ஓர் உணர்வு, அவளை பற்றியே புதிது புதிதாய் சிந்தனைகள்.

நிஜமான ஓர் பயணத்தை விட்டு விலகி, கற்பனை பயணத்திற்கு சென்று விட்டேன்,
அவள் பேசினால் எப்படியிருக்கும், இதழ்கள் எப்படி குவியும் எப்படி பிரியும் எப்படி எப்படி என பலப்படி ஏறி யோசித்துக்கொண்டு இருந்தேன். சரி இவள் எப்படித் தான் பேசுவாள், அந்த இனிய குரலை கேட்க வேண்டுமே, அந்த இசைபேச்சில் நான் மயங்க வேண்டுமே. சிந்தனையும் கற்பனையுமாக இருந்த வேளையில் திடிரென்று ஓர் பெண் குரல், அண்ணா “தமிழ்” நகர் வந்ததும் நிறுத்துங்கள் என்று. நானும் திடிரெண்டு கற்பனை பயணத்தை முடித்துக்கொண்டு சுய நினைவிற்கு வந்தேன். யார் பேசியது ? ஒரு வேலை அவள்தான் பேசினாளோ ? வேறு யாராவது பேசியிருப்பார்களோ ? அய்யோ நல்ல சந்தர்ப்பத்தை இழந்து விட்டோமே, அவள் பேசியிருந்தால் அதை கண்டும் கேட்டும் எவ்வளவு இரசித்திருக்கலாம். யார் பேசியது என்று எவ்வாறு கண்டுபிடிப்பது. ஒரே குழப்பமாக இருந்தது எனக்கு,

(தொடரும்)

எழுதியவர் : செந்தில் குமார் ஜெ (10-Feb-15, 10:18 am)
Tanglish : meendum aval
பார்வை : 472

மேலே