நான் நியந்தா பேசறேன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்

நான் நியந்தா பேசறேன்ன்ன்ன்ன்ன்............

இது தான் நீ என்னிடம் பேசிய முதல் வார்த்தை.. வாக்கியம்... கவிதை....ம்ம்ம்... வேறு என்ன வேண்டுமானாலும் சொல்லிக் கொள்ளலாம்...... ஆனால்..... அது உண்மை....இப்போது நினைத்தாலும்.... அந்த ஒரு வாக்கியம் தரும் பேரின்பம்... எனக்கு வேறு இலக்கியங்கள் தருவதில்லை என்றே நினைக்கின்றேன்...... நான் ஒரு பறவை என்பதை அன்று தான் முதன் முதலாக உணர்ந்தேன்....வானத்தின் நயனங்கள் ஆனது உன் புருவ சுழிப்பு....... உணர்தலில் உள்ளூர உத்சவம் நடத்தும் உண்மையில், உணர்தல் உன் சொல் என்பதை நாம் முதலில் சந்தித்த அந்த நீல நதிக்கரை இருபக்கமும் மறந்து நம்மையே கண் கொட்டி பார்த்ததே...அந்த பார்வையில் ஒரு சொல்லாகிப் போன நாம்... நாம் சேர்ந்து எழுதாத புதுக் கவிதையின் மரபு.... உண்மையில் மை இல்லாத காகிதம் போல, பொய்மையில்... வாய்மை எனப்படுவது உன் அருகாமை என்று நான் உள்ளூர வியந்து கிடந்தது நாம் ஒன்றாக நடந்த அன்று தான்....எத்தனை ஆச்சரியம் நீ.... "இப்படியும் ஒரு பெண் இருப்பாளா..." என்று உன்னிடமே நான் வியந்து முயங்கிக் கிடந்திருக்கிறேன்....... அப்போதெல்லாம் நீ சொல்லும் மொழி.... நான் நினைத்தே பார்க்க முடியாத ஓவியம்..... அல்லது.... கிறுக்கல்........(இந்த இரண்டில் நீ குழந்தையா..... கவிதையா... என்பது தானே... நமக்கான சண்டை....)

"ம்ம்ம்.... நீங்களும் தான்.... எனக்கு பிடிச்ச மாதிரிஇருக்கீங்க...." என்று நீ கூறும் நொடியில் நான் நீயாகவே மாறியதை நாம் முதல் முறை பிரிந்த போது தான் உணர்ந்தேன்.... பொதுவாக.. நீ பேசும் ஒவ்வொரு சொல்லிலும் கலந்திருக்கும் போதி மரத்தின் இலைகளின் பச்சை நரம்புகளை.... நான் பின்னிக் கொண்டே இருப்பேன் என்று உனக்கு தெரிந்த நாளில் ......"ம்ம்ம்........போங்க... என்று சொல்வாயே..." அதில் கலந்த மூச்சு காற்றை..... நான் வாசிக்கவில்லை..... சுவாசிக்கிறேன்....

அலைபேசியில் நீ ஆச்சரியம்....... நேரில் பார்க்கும் போது.... நீ முழு பரீட்சை..... மிரண்டு அருகினில் வந்தேன்.. நீயும் அதையே கூறினாய்....ஒருவரையொருவர்... ஆழமாக பார்த்தோம்.. (இருவருமே நடிப்பில் பிரமாதம் இல்லையா.....) பின்... அளவோடு பார்ப்பதாக காட்டிக் கொண்டோம்.... பின்னொரு நாளில் பேசிக் கொள்ளும் போது சொல்லி சிரித்தோம்....செதுக்கிய பூங்காற்றை... உன்னிடமே கொண்டாய்..... பாராங்கல், நான் கூட கட்சி மாறினேன் பூக்களுக்கு... உனது கண்களை கடன் கொடுப்பதே உன் வேலை என்பேன்.... "போங்க" என்பாய்..... "போடா சொல்" என்றால்.... "ம்ம்ம்.... மாட்டேன்.... போ....." என்பாய்.... அதில் எனைத் தின்பாய்.....எனை எப்போதுமே... வியப்பில் ஆழ்த்திக் கொண்டே இருக்கின்றன உனது சொற்களும்.... உனது பற்களும்....... கூடவே உனது மௌன முற்களும்....


உனக்கு நினைவிருக்கிறதா.... நான் நினைத்த ஒன்றை நீ கூறினாய்..... நீ பார்த்த ஒன்றை நான் காட்டினேன்.. பின் இருவருமே ஒரே சொல்லை ஒரே நேரத்தில் ஒன்றாக கூறினோமே... நம் காதலை பரிமாறிக் கொண்ட மிக அற்புதமான தருணம் அது.....அந்த தருணத்தில்..... "ஹே....." என்று இருவருமே.. ஒரு கணம்.. திரும்பி முகம் பார்த்துக் கொண்டதில்... கண்டிப்பாக நம் பூமி நின்று தான் சுற்றி இருக்கும்.... பட்டும் படாமல் கைகள் உரசி... விரல் பற்றிக் கொள்ளாமலே, தோளும் தோளும்... உரசி... சிறகாக முடியாமலே.... தடுமாறிய நினைவுகளை.... பின் ஒரு நாளில் இருவருவுமே அவரவர் பார்வையில் விவரித்துக் கொண்டது புது திரைக்கதை யுக்தி......அது தீராக் காதலின்..... முக்தி....

எத்தனை கடிதங்கள் எழுதிக் கொண்டோம்... அத்தனையிலும்.... நிஜங்கள் மட்டுமே.... நமக்கு முகமூடி தெரியாது ... எழுதிய எழுத்துக்கள் ஒவ்வொன்றிலும்... நீ வண்ணங்களில் பூத்த மாயாஜாலங்கள் நிகழ்த்தினாய்.. நானும் பூக்கள் நட்டினேன் என்பது உன் அன்பின் வெளிப்பாட்டில் நான் புரிந்து கொண்டது........சின்ன சின்ன சண்டைகளில்.... நீ நிலவை உடைப்பாய்..... நான் நிலவாய் உடைவேன்......நான் எரிமலை வெடிப்பேன்..... நீ.... ஏறிந்த பின்னும்....கிடைப்பாய்...... உன் கோபங்களில்... நான் மெல்லிசை..... என் கோபங்களில் நீ பன்னிசை.... இசைகளின் கோர்வையில் நீ நான் சங்கீத சங்கேதம்... மௌனங்களில்... நாம் நீரில்லா மீனைப் போல துடித்தே இருந்தோம் என்று பின் பேசிக் கொண்ட இரவுகளில் காதோரம் கிசு கிசுத்துக் கொள்வோம்... நதியோரம்.... கனவுகளாய் வசீகரித்துக் கொள்வோம்....இத்தனை காதலை உன்னிடமே நான் உணர்ந்தேன் தோழி...உன்னிடமே.... புரிந்தேன்.... தோழி..... இப்போதும் ஒரு முறை சொல்லத் தோன்றுகிறது....... இப்படி ஒரு பெண்... நான் கடந்த பாதையில் இல்லை...இல்லவேயில்லை......மீண்டும் ஒரு முறை.... இல்லவேயில்லை....

உன் பாதையில் நான் கடக்கவே இல்லை.... நான் கடக்கவே முடியாத பாதை நீ.... கடந்தாலும்..... கிடைக்காத தூரம் நீ.... கிடைத்தாலும்.... தூரமாய்.... இன்னும்.... தூரமாய்.... நீ.... உன் தேசத்து தூரிகைகளின்.... ரசனைக்கார மழைத் துளியின்.... வெடித்து விடாத குமிழ், நானாக இருக்கவே ஆசைப் படுகிறேன்....நாம் அடிக்கடி கட்டிக் கொள்ளும் நதியை நான் சமைத்த ஒரு நாளில் தான்... நீ புது கூலாங்கற்களை தூவினாய்.... கரையோரங்களில்.... பூக்கள் மட்டுமல்ல... செடிகளும் இருக்கட்டும் என்றாய்... நாம் வளர்த்த மான் குட்டி ஒன்று நதியில் விழுந்த அன்று நீ அழுத அழுகைக்கு நான் அர்த்தம் தேடாமலே... அணை கட்டினேன்... நீர் பஞ்சம் வந்தாலும் பரவாயில்லை.. உன் விழியில் நீர் கொஞ்சம் கூட வேண்டாம் என்றேன்... ஓடி வந்து கட்டிக், கொண்டாய்... புது மான் போல முட்டிக் கொன்றாய்...

முதல் சந்திப்பில் அந்த மலை உச்சியில் நாம் மட்டும் நின்றது நினைவிருக்கிறதா..... நமக்காகவே வீசிய காற்றை நான் உன் தோழி என்று நினைத்தேன்,....... நீ என் தோழன் என்று வெறுத்தாய்....(உனக்குதான் என் தோழர்கள் பிடிக்காதே) ஒரு காட்றாற்றின் வேகத்தின் உன் சொல் பிரயோகம்.... மூச்சடைத்து நின்றேனே... நீ ஏதோ ஒரு புள்ளியில் என் அருகே வர... நான்... மிகவும் கடினத்துடன்.. சற்று பின் சென்றேன்..... நினைவிருக்கிறதா..... பின் சென்றது உன்னை பிடிக்காமல் அல்ல.. மிகவும் பிடிக்கும் என்பதால் தான்...பிடித்த ஒன்றில் பிடிக்காத ஒன்றும் இல்லாமலே போக பிடிக்காத ஒன்றும் பிடிக்கும் ஆச்சர்யம் உன் அருமையில் மட்டுமே... பிடித்தல் என்பதும் பிடிக்காது என்பதும் ஒன்றுமில்லாமல் போனது உன் தூரத்தில் நான் கண்ட பொய் என்று சொன்ன நிஜம்... பூர்வகுடி இருப்பில் பூஜ்யம் சாத்தியம், சூனியம் காத்திருக்கும் கதவடைப்பில் கத்தரிப் பூ மழையில் முழு இரவு பனி நீ எனக்கு.. நான் யார் என்று பிரிவுகள் சொல்வதில் சிறு சிறு மரணம் தான் எனக்கு....

நம் நண்பனின் திருமணப் பந்தியில் உனக்காக அத்தனை நேரம் நான் காத்திருந்து கொஞ்சம் கோபமாகி... நான் மட்டும் சென்று சாப்பிட எனக்கு சற்று பின் தான் நீ வந்தாய்....நீ எனக்கு முன்னால் அமரும் சூழலில் எனைப் பார்த்து.... யாருக்கும் தெரியாமல் ஒரு புன்முறுவல் தந்தாயே.... அதை இந்த ஜென்மத்தில் நான் எப்படி மறக்க..... மறக்கும் வியாதி இருந்தால் யாரிடமாவது கொஞ்சம் கடன் வாங்கி அனுப்பு..... மறந்தாலாவது நான் மரிப்பேனா..... பார்க்கிறேன்.....நான் உன்னைப் பார்த்து பொய் கோபத்துடன் "போ..." என்று ஜாடை செய்தது உனக்கு பிடித்ததென்று பின் ஒரு நாளில் குறுஞ்செய்தி ஒன்றில் சொல்லி இருந்தாய்..... மீண்டும் ஒரு முறை எனைக் கிள்ளிப் பார்க்கிறேன்... உனக்கு எப்படி என்னைப் பிடித்தது என்று...... உன்னை முழுதாக பார்த்து முடிக்கவே எனக்கு இந்த ஒரு ஜென்மம் போதாது நியந்தா..... தேன் கூட்டின் சரி பாதியென இரு கண்கள்... அதில் கடலென.... தத்தளிக்கும் அலைகளின் தேடலை நான் மட்டுமே உணருகிறேன்....உணருதலில் ஓஷோ சற்று இளைப்பாரட்டும்.... அல்லது.... புத்தனே வந்து இலை மறை காயாகட்டும்.... எல்லாம் தாண்டிய தியானம் நீ.... உனைச் சேரும்.... தனிமைக்குள் நான் மட்டுமே... பூதக் கண்ணாடி தரித்து....புன்னகை புரிவேன்....மனச் சரிவில் மாட்டிக் கொண்ட பின்னாலும் நினைவுகளில் நீ சரிந்து கிடப்பது வரம்.......உன்னோடு துறவறம் கூட அறம்

உனது கோபங்களின்.... தாபங்களை எனையன்றி யார் புரிவார்...... நீ வெறுத்தாலும் வெறித்தாலும் அங்கே வெற்றிடமாய் நான் மட்டுமே....நீ வரையும் ஓவியங்களில் நான் வண்ணமற்று போகிறேன்... சில போது எண்னமற்றும்... வெளிகளின் தடத்தில் நீ வலைகளை வரைந்தாலும்... நான் நிழலற்று வந்து மாட்டிக் கொள்ளும் நிறங்களின் காதலனாகிறேன்....நமது பேச்சுகளை தீரா நதி என்று யாராவது சொல்லக் கூடும்... தீர்ந்தாலும் நதி என்பது போலதான்.. நம் சண்டை நாட்களிலும்.... சண்டைக்கு பின் நான் பேசும் அலைபேசியில்... முதலில் நீ பேசுவது..... இப்படித்தான்.. இருக்கும்....

"என்ன.. சொல்லுங்க... உங்க கூடயெல்லாம் பேசறேன் பாருங்க.... என்ன சொல்லணும்..... உங்களுக்கு இன்னும் என்ன பத்தி தெரியல.... நான் ஒரு நாள் இல்லாம போவேன்.... அப்போ தான் யோசிப்பீங்க....."

இப்போது யோசிக்கிறேன்....... நியந்தா.... உன்னை எப்படியெல்லாம் திட்டி இருக்கிறேன்..... அடித்திருக்கிறேன்.... ஒரு ஆணாதிக்க கவிதையாய் உன் மேல் படர்ந்திருக்கிறேன்......நீ இருக்கும் போது உன் ரயில் சிரிப்பின்.... அர்த்தம் புரியவில்லை..... இன்று நீ ஒற்றை ரயிலாய் வெகுதூரம் போன பின் தான் ஒற்றைப் பனைமர வலி தெரிகிறது..... பேய் பிடித்த மரமாய்.... கள் உண்டு கிடக்கிறேன்.....நீயும் தான் என்னை யாருமே சொல்லி திட்டாத வார்த்தைகளால் கொன்று இருக்கிறாய்.... இருந்தும்... நான் பிழைத்துக் கிடப்பது.. அந்த ரயில் புன்னகையாலும்...."ம்ம்ம்..... பாப்பு.... உங்களயே நினைச்சிட்டு இருக்கா" என்று நீ சொல்லும் ததும்பளுக்காகவும் தான்....

காட்றாற்று கடைக் கோடி துகள் என உன் அழுகை..... நினைத்து நினைத்து நான் செய்யும் தொழுகை.... நிஜமாலுமே நீ .. எனக்குள் நானே போட்டுக் கொண்ட சிலுவை....அயோ.... இதை மறந்து விட்டேனே.... சிலுவை என்றதும்தான் மோதிரம் மாற்றி நாம் செய்து கொண்ட திருமணம் நினைவுக்கு வருகிறது........ மோதிரம் மாற்றும் போது நீ சிரித்ததும்.. மாற்றி முடித்ததும் மெல்ல நீ அழுததும்... எனக்குள் பதிந்து போன மாய கண்ணாடி... பாதரசம் போனாலும்... பாதி ரசம்... என்னை சுரண்டும்... யாத்திர தேடல் அல்லவா அது....!...முகத்திரை கிழியாத போது யாத்திரைகள் சுலபமல்ல என்பதை.... நித்திரை கிழித்த கனவில் உன் முகம் கூறியதை நான் புலம் பெயர்ந்த ஆழ் மன வலியோடு.... உணர்ந்தேன்....உணர உணர.... கிணறு தோண்டும்.... இல்லாமை.. கல் மணல் என... கொஞ்சம் நீரையும்தான் கண்ணீராக மாற்றும் தந்திரச் சூழலில்,..... போய்க் கொண்டே இருக்க தூரம்.... தூரம்... இன்னும் கொஞ்சம் தூரம்.... பூமியின் மறுபக்கம் முகம் தெரிய அங்கும் நீ நான்.... நம் நிழலென நம் காதல்....

நம் சண்டையில் நம் குழந்தை, காதல் பாவம்..... அது அனாதையாக அழுது கொண்டிருப்பதை.... விரும்புகிறாயா... நியந்தா.....நீ, நான் அழுதாளே துடித்து போவாய்..... உனக்கு அன்பு காட்டத்தான் தெரியாதே தவிர.... அன்பின் உருவம் நீ.... உனது காதலை உள் வாங்கவே....கடவுளாக வேண்டும்..... நான் கடவுள்களின் மொத்தம் என்று நீயே கூறி இருக்கிறாய்....கடவுளாய் இருப்பது எந்தனை வலி என்று தெரியுமா உனக்கு.... கவிதையாய் இருப்பதை விட கவிஞனாக இருப்பதுதான்... கஷ்டம்.... எழுத எழுத கவிதையாகி விடுவாய்...... எழுதாமல் விட்டால் கவிஞன் இல்லாமலே போவான்... கடவுளும் அப்படியே... புதைக்க புதைக்க பீரிட்டு எழும் நம் காதலைப் போல,தொலைந்து காணாமல் போய் பின் கிடைக்கும்..... நம் பின்னிரவின் முத்தம் போல.... நம் அறையின் தீரா வெட்கமென.... ஒரு சுழல் கொண்ட வானவில் கலைதலாய் கடவுளும்.... இருந்து விடட்டும் என்பது எனது கவிதையின் சாரம்... அல்லது உன் ஓவியத்தின் ஓரம்........

உன் ரகசிய மொழிக்குள்.... நான் பகிரங்கமாய்..... காணாமல் போவது.... நீ அறிந்தும் அறியா..... கானல் நீரின் சூடு..... மதில் தாண்டாத பூனைகளின் தேசத்தில்... நான் புலி என்பதில் காடு எதற்கு....? மிஞ்சிய யாவும்..... தான்சேனின்.... இசையென .... அழுகிறது.....நம் மழை சொல்லும் தத்துவத்தில் நாம் குடையானோம்.. காற்று திசை அறியாத போது மழையாகவே ஆகிடுவோம்.. குடை... வலிக்கிறது.....

குறும்பு புன்னகை உனது ரகசியக் கசிதலாக, அரும்பும் மானுடம் என்னை புசிக்கிறது...... தோழி..... நீ தீர்வை சுமந்து கொண்டதில் பாரம் முழுக்க எனக்கு....பறக்க பறக்க திறக்கும் வாசலென உன் வானத்தில் நான் ஒரு எரிகல்லாகவாது இருந்து விட்டு போகிறேன்...யாத்திர பாதைகளில் இருவர் பாதங்களும் ஒன்றாக தான் இருக்கும்...கால இடைவெளி என்பதை கண் கொண்டு கண்டது நம் வாழ்வில் தான் பெண்ணே.... நமது பால்வீதியின் ஒரு முனை உன்னிடம்.. மறுமுனை என்னிடம்.... முனைகளின் ஆரம்பிப்பதும் இல்லை முடிவதும் இல்லை... ஒரு தூரம்.... இல்லையா...

கடைசியாக நாம் போட்ட சண்டையில் உன்னை அதிகமாக அழ வைத்தேன்.... ஆனால் ஒவ்வொரு நாளும் கொஞ்சம் கொஞ்சமாக நான் அழுவது உனக்கு தெரியாமல் இல்லை.... நமக்குள் இருக்கும் எல்லாமே இது தான்... நாம் ஒருவரையொருவர் உணர்த்த வேண்டியதே இல்லை.... வெறும் மௌனம் கூட வேண்டாம்... இருத்தல் வேண்டவே வேண்டாம்.....மரணத்தில் கூட புரிந்து கொள்ளும் காதல் நமக்கு வாய்த்திருக்கிறது நியந்தா...... அது தான் தேவ மகத்துவம்...... மௌனக் கடலின் அசையாத அலை என்பது நம் தத்துவம்...

வந்து விடு..... ஒரு கடவுளாகவாவது ... துடித்துக் கொண்டிருக்கும் ஒரு சிறு மீனின்.... அலை.... உன் உள்ளங்கை சூடு.....மிஸ் யூ சோ மச்..... நியந்தா.....நியந்தா............................

கவிஜி

எழுதியவர் : கவிஜி (10-Feb-15, 12:16 pm)
பார்வை : 341

மேலே