ஸ்ரீ பவானி தியேட்டர்
பதினோராம் வகுப்பு
படிக்கும்போது
ஸ்ரீ பவானி தியேட்டர்
எங்களுக்கு
அறிமுகமானது !
அறிமுகப்படுத்திய
நண்பனுக்கு
அப்போது
மீசை முளைத்திருக்கவில்லை !
சனிக்கிழமைகளின்
பதினொன்னே முக்கால்
சுமாருக்கு
எங்களை அங்கே
பார்க்கலாம் !
இடைவேளைக்குப்
பிறகுதான்
படம் போடுவார்கள் !
மௌனமாக
ஓடும் படங்களுக்கு
பின்னணி இசை
வாசித்துக் கொண்டிருக்கும்
தியேட்டரின் நிசப்தம் !
சீருடையில்
போகக்கூடாது
என்கிற கற்பை
கடைசி வரை
காப்பாற்ற முடியவில்லை !
இதற்காகவே
மாற்றுச் சட்டையொன்றைப்
பையோடு வைத்திருப்பான்
ஒருவன் !
ஒருநாள்,
தியேட்டரில்
பார்த்து விட்ட சித்தப்பா
அப்புறம் எதுவும்
கேட்டுக்கொள்ளவில்லை !
கல்லூரி
மூன்றாமாண்டில்
ஸ்ரீ பவானி தியேட்டர்
மூடப்பட்ட போது
இளமை மீறிய
இனம்புரியாதொரு துக்கம்
தொண்டைக்குழியில் ........
ஒரு
தொலைகாட்சி
நெடுந்தொடரில்
தலைகாட்டிய
அந்த நடிகரைப் பார்த்து
அறை நண்பர்கள்
விசிலடித்தார்கள் !
போன வார
வெள்ளிக்கிழமை
பிற்பகலில்
கூட்டமில்லா
பேருந்து நிறுத்தத்தில்
சீருடையணிந்த
இரண்டு விடலைப் பையன்கள்
அலைபேசி பார்த்து
நமட்டுச் சிரித்தபடி .......
எனக்குப் புரிந்து,
இப்போது
இல்லாமல் போய்விட்ட
ஸ்ரீ பவானி தியேட்டர்
ஒரு கணம்
மனத்திரையில்
விரிந்த போது ,
அங்கேயிருந்த
காகமொன்று
மூன்று முறை
கரைந்துவிட்டுப் பறந்துபோனது !