மூங்கிலின் புல்லாங்குழல் முத்தம்
இசைத் தானியம்
தேடி வந்த குயில்
உன் கொலுசொலியை
மேய்ந்து திரிந்து
இசையாய் அதை
கூவுவதற்குத் திறந்த
அதன்
அலகு பட்டதிரும்
காற்றின் மெல்லிசையை
பிரித்துனது துளைகளின்
விரல் மூடல்களால்
எனையகழ்ந்த
புல்லாங்குழலே !
பசுமை நிறை
உன் மூங்கிலின்
வேர் தேடி
புல்லாங்குழல் காடழிந்த
கொடும் வாதையின்
பொட்டல் வெளிகளெங்கும்
ஒற்றைக் குயில்
சிறகடிக்கையில் -
ஒளிச் சேர்க்கையற்ற
காய்ந்த
உனது மூங்கில் குச்சியில்
ஒலிச் சேர்க்கை
நிகழ்கையில்
காற்றினை
முத்தமிட்டுத் திரும்பும்
அத்தனை நொடிகளிலும்
நிலாத் தொட்டு
திரும்புமெனது
உயிரோசையின்
பெரும் சுவாசம் !
சுக்குநூறாய் நான்
சிதறிக்கிடக்கிற
போதெல்லாம்
புன்னாகவராளி
பாடுமுனது
சுடுதுளைப்
புண்களின்
இன்னிசை
எனைக் கோர்க்கா
தினமெனது
வேதனை வேறுவிதம் .