ஒரு விழாதினத்தின் மறுநாள்

....ஒரு விழாதினத்தின் மறுநாள்....

செய்யாத
வீட்டுப்பாடம்
சிறுமூளையை
உதைக்கும்.
பாலீஸ்டர் சீருடை
கிலோ கணக்கில்
கனக்கும்.
வண்ணக்காகிதம்
பொறுக்கி சிரித்த
ஜிகுனா நிமிடங்கள்
மின்னி மறையும்.
அம்மாவின் அதட்டலில்
கண்ணாடி மிஸ் முகம்
மிரட்டி நடுங்கச் செய்யும்.
இன்னுமொரு நாள்
தள்ளிப் போடலாம்
காய்ச்சல் நண்பனை
துணை தேடும்.
சத்தியமாய்
இந்த ஒன்பது மணி
எமகண்டம் தான்.
இதோ
பள்ளிப்பேருந்தின்
ஆரன் சத்தம்
காதில் நுழைந்து
விழிவழி வழியும்.
எல்லாமும் தாண்டி
மறக்காமல் எடுத்து
வைத்திருப்பாள்
என் மகள் தனது
தோழி ஸ்டெல்லாவிற்கு
விழாதின பண்டத்தை.
--கனா காண்பவன்

எழுதியவர் : கனா காண்பவன் (23-Feb-15, 9:30 am)
பார்வை : 106

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே