மௌனச் சதிராடல்

உனதந்த ஒற்றைச்சொல்லை
யாருக்காகவோ நீயளித்ததொரு
அர்ப்பணத்தின்
மேலிருந்து தான்
நேர்கொண்டேன் ...

புஜபலபராக்கிரமத்தின்
சக்தி பெற்றிருந்தது அது -
சொல்லாட்சி நடக்குமுனது
அரியணையிலிருந்து
நா நாண் தொடுத்து
ஏவினாயதை என் மேல் !

உன் உத்திரவிற்கடிமையாகி
என் வறட்சியின் நிலத்தில்
மேலும்
சூரியனை உமிழ்ந்திவிட்டுச்
செல்கிறது ....
நீர் வேண்டித் தாகம் தீரத்
தவிக்குமென் நிலத்தில்
பிணக்கச் சக்கரத்தினாலெனது
மண் பிளந்து
மௌனச் சதிராட்டம்
நடத்திச் செல்கிறதந்தச்
சொல்லிடம்
சொல்லியனுப்பியிருக்கிறேன் !

உனது
வலது மேலுதட்டின்
மச்சக் கருவைரம் மின்ன
உமிழ்நீர் தீர்த்தம் தடவி
நீ எய்த அஸ்த்திரம்
சொல்லைக் கூராக்கி
கழுவேற்றிக் கொல்கிறது-
அம்புப் படுக்கையில்
சல்லடையாக்கி
சாய்த்து சயனிக்கவைத்து
வலம் வருகையிலும்
உன் அன்பின்
கடைவிழிச் சமிக்ஞை
தேடியலைகிற
மனதை என் செய்ய ?

எழுதியவர் : பாலா (1-Mar-15, 8:39 pm)
பார்வை : 127

மேலே