இருந்தும் கெடுத்தான் இறந்தும் கெடுத்தான் - மனிதன்

அன்பு உள்ளங்களே..!

என் தமிழ்..! என்னினம்..! என்று சொல்லும்பொழுதெல்லாம் வாட்டுகின்ற மனதில் வடுவான ஒரு தீராத வலி இது...! மனிதன் நாம் ஒரு மாடு உயிரோடு இருக்கும்வரை அதை அனைத்து உபயோகங்களுக்கும் அடித்து அடித்து வேலை வாங்குகிறோம்.. அதன் பயன் முடிந்தபொழுது அடிமாடாய் விற்றுவிடுகிறோம். மீண்டும் அது இறந்தபிறகு அதன் தோலை வாங்கி மேளத்தில் (பறை) கட்டி மீண்டும் அடிக்கிறோம். கடைசிவரை அடிதான்..! இதைதான் சொல்வார்கள் "இருந்தும் கெட்டான் ; செத்தும் கெட்டான்" என்று..!

நம் தமிழ் இனஉறவுகளின் நிலைமையும் அப்படிதான் இன்று.. தமிழ் என்று சொன்னால் அங்கு அவன் அடிக்கிறான். ஏன் என்ற கேள்வி எழாத பொழுது எவனெவனோ அடிக்கிறான் இங்கும்.. எல்லாம் ஆட்சிகளின் சூழ்ச்சிகளாய் போய்விட்டது விடையேதுமில்லாமல். இந்நிலையில் நமது நிலைமையும் அந்த பழமொழிபோலதான் உள்ளது.. அதன் விளைவாக விழுந்தன இந்த வரிகள்.. விதைக்கிறேன் விடியலைநோக்கி..! ஏனெனில் மன்னனை தேர்ந்தெடுக்கும் அதிகாரம் நம் கையில்தானே உள்ளது.. சிந்திப்போம்..!

இருந்தும் கெடுப்பான் ;
இறந்தும் கெடுப்பான் –

மனிதன் வாயில்லா ஜீவனவன்,
வாழ்விற்கு துணையுமவன்;
பழுதுண்ட நிலமெல்லாம் -
பண்படவே இவனுழைப்பு..!

உழைப்பாளி உயர்வுக்கு,
உதைவாங்கும் வீரனவன்;
ஊமையாக இருந்தாலும் -
உள்ளத்தில் வெள்ளையவன்..!

அடித்தாலும் வலித்தாலும்,
ஆறுதலே யில்லாமல்;
அவன்காட்டும் விசுவாசம்-
ஆறறிவில் கிடையாது..!

முரண்பிடிக்கும் அவனுக்கு,
மூக்கணாங்கயிறு யெனில்;
மதம்பிடித்த மனிதனுக்கு-
மனசாட்சி எதற்கிருக்கு..?

வண்டியிலே பூட்டிவைத்து,
வாரிசுகளை ஏற்றிவிட்டு;
வயதைக்கூட பாராமல் -
வேகமென விரட்டியவன்..!

சாட்டையிலே தோலுரிக்க,
சருமமது புண்ணாகும் ;
கண்மூடி போய்வருவான்-
கண்ணீரைப் பாராமல்..!

அழகென்னும் என்தேகம்,
அழுக்காக்கி கிடத்திவிட்டு;
அழகெலாம் செய்துகொண்டு-
அலுவலகம் அவன்போவான்..!

ஓடிவோடி உழைத்தாலும்,
ஓய்வூதியம் எனக்கில்லை;
உழைக்காத வேலைக்கு-
உயர்பதவி கேட்டிடுவான்..!

அடிவாங்கி ஆயுள்குறைய,
அடிமாடாய் விற்றிடுவான்;
உயிர்போன பின்னாலும்-
உரித்திட்ட யென்தோலை..!

பறையென்று கட்டிவைத்து,
பாரெங்கும் அடித்திடுவான்;
இருந்தாலும் இறந்தாலும்-
இரக்கமது இல்லையென்று..!

என்பிழைப்பும் தமிழ்பிழைப்பும்,
என்றுமது துடித்திருக்கும்;
தமிழென்றால் அவனடிப்பான்-
தமிழாலே இவன்நடிப்பான்..!

இருந்தும் கெடுக்கின்றான்
இனம்செத்தும் கெடுக்கின்றான்;
தரணியின் பழ(மை)மொழியோ
ஐயோ..!
என் தமிழினத்தையும் கூறுபோடுதே..!

எழுதியவர் : ஜாக் .ஜெ .ஜி (2-Mar-15, 12:49 pm)
சேர்த்தது : ஜெபீ ஜாக்
பார்வை : 118

மேலே