வலிமிகுதல் அல்லது வலி மிகும் இடங்கள் பகுதி 1
வல்லினம் என்பது பழந்தமிழ் இலக்கணங்களின் அடிப்படையில், தமிழில் உள்ள மெய்யெழுத்துக்களின் மூன்று வகுப்புக்களுள் ஒன்று. க், ச், ட், த், ப், ற் எனும் ஆறு எழுத்துக்களையும் வல்லின எழுத்துக்கள் என்கின்றனர். இவை வலிய ஓசை உடையவையாதலால் இப்பெயர் பெற்றன. இவற்றை வலி, வன்மை, வன்கணம் என்னும் பெயர்களாலும் அழைப்பது உண்டு.
தமிழைப் பிழையின்றி எழுத விரும்புபவர்கள், வல்லின எழுத்துக்கள் மிகும், மிகா இடங்களை அறிந்து கொள்ள வேண்டும். வல்லின எழுத்து மிகுந்து வருவதையே இலக்கணத்தில் "வலிமிகுதல்' எனப்படும். இரண்டு சொற்கள் இணையும்போது, இடையில் க், ச், த், ப் ஆகிய ஒற்றெழுத்து வந்து இரு சொற்களையும் ஒன்று சேர்த்தால் அதற்கு "வலி மிகுதல்' என்று பெயர்.
வலி மிகுவதால், சொற்களில் பொருள் வேறுபாடு தெரிவதற்கும், பொருளைச் சரியாக உணர்வதற்கும், உச்சரிக்கும் போது தமிழ்மொழிக்கு உரிய இனிய ஓசையை வெளிப்படுத்துவதற்கும் உதவுகிறது.
சில ஊடகங்கள், அனைத்துத் தொலைக்காட்சிகளின் அறிவிப்புகள், செய்திகள், சில செய்தி நாளிதழ்கள், விளம்பரப் பலகைகள், ரயில் நிலைய அறிவிப்புப் பலகைகள் எனப் பல இடங்களில் வலி மிக வேண்டிய இடத்தில் வலி மிகாமலும், வலி மிகாத இடத்தில் வலி மிகுத்தும் இருப்பது (ஒற்றுப்பிழைகள்) மிகவும் வருந்தற்குரியது.
நம் எழுத்து தளத்தில் உள்ள சிலரும் ஒற்றுப் பிழைகளுடன் எழுதுகின்றனர். கருத்திற்க்கு - வல்லின 'ற்' றை அடுத்து க், ப் போன்ற ஒற்றெழுத்துகள் வராது. அர்ப்பணிக்கிறேன் என்ற சொல்லை அற்ப்பனிக்கிறேன் என்று எழுதுகிறார். ஒரு சொல்லில் மூன்று தவறுகள். கவனக் குறைவுதான் காரணம். கேட்டால் எனக்கு நன்றாகத் தமிழ் வராது என்றோ, மொபைல் போனில் டைப் செய்கிறேன் என்றோ சொல்லக் கேட்கிறேன்.
இலக்கணம் படிக்காதவர்களும் மிக எளிதாக வல்லெழுத்து மிகுதலை அறிந்துகொள்ள கீழே தரப்பட்டுள்ள சில விதிகளை கவனத்தில் கொள்ள வேண்டும்.
அ, இ, எ,
அந்த, இந்த, எந்த,
ஆங்கு, ஈங்கு, யாங்கு,
அப்படி, இப்படி, எப்படி
ஆண்டு (இடம்), ஈண்டு, யாண்டு,
அவ்வகை, இவ்வகை, எவ்வகை,
அத்துணை, இத்துணை, எத்துணை,
இனி, தனி, அன்றி, இன்றி
மற்ற, மற்றை, நடு பொது,
அணு, முழு, புது, திரு
அரை, பாதி, எட்டு, பத்து,
முன்னர், பின்னர்.
ஆகிய இவை நிலை மொழியாக (முதலில் நிற்கும் சொல்) இருந்து, க, ச, த, ப என்ற வல்லின எழுத்துகளுள் எது வருமொழி முதலாக வந்தாலும் வல்லின எழுத்தானது கட்டாயம் மிகும்.
க என்றால், க முதல் கௌ வரையிலுள்ள எழுத்துகளாகும். இவ்வாறே,
ச (ச முதல் சௌ வரை), த (த முதல் தௌ வரை), ப (ப முதல் பௌ வரை)
என்னும் எழுத்துகளுக்கும் பொருந்தும்.
அதாவது, அடுத்து வரும் சொல்லின் முதலில் க, ச, த, ப வர்க்கம் வந்தால்தான் வல்லெழுத்து மிகும். க, ச, த, ப வர்க்கம் தவிர வேறு எழுத்துகள் வந்தால் மிகாது.
அங்கு, இங்கு, எங்கு என்னும் சொற்களுக்குப் பின் கட்டாயம் வல்லெழுத்து மிகும். சில எடுத்துக்காட்டுகள்:
அ - அப்பக்கம், இ - இச்செடி, எ - எப்பக்கம்,
அந்தச் செடி, இந்தக் குழந்தை, எந்தப் பாடம்?,
அங்குச் சென்றான், எங்குக் கேட்டாய்?, எங்குச் சென்றாய்?, ஆங்குச் சென்றான்,
அப்படிப் பேசு, இப்படிச் சொல், எப்படித் தந்தாய்?,
அவ்வகைச் செடி, இவ்வகைப் பூக்கள், எவ்வகைக் கொடி?,
அத்துணைப் பெரிய, இத்துணைச் சிறிய, எத்துணைப் பாடல்கள்,
அங்குப் போனார், இங்குச் சென்றார்,
இனிப் பேசமாட்டேன், தனிக் குடித்தனம்,
காக்காக் கதை, அம்மாக் கவிதை,
அம்மாச் செல்லம், அப்பாச் செல்லம்,
மற்றப் பிள்ளைகள், நடுக்கடல், பொதுக்கூட்டம்,
முழுப்பக்கம், புதுப்பொருள், புதுத்துணி, அரைப்பக்கம்,
பாதித்துணி, எட்டுக் குழந்தைகள், பத்துச் செடிகள்,
முன்னர்க் கண்டேன், பின்னர்ப் பேசுவேன்.
(தொடரும்)