விதியின் பிடியில்
பிரிந்தவர் கூடினால்
பேசவும் கூடுமோ...?
எங்கோ படித்தது...
நீண்ட பிரிதலுக்குப் பின்
நீயும் நானும்
ஒரு பொங்கல் நாளில்
சந்தித்தபோது
நமக்குள்ளும் நிகழ்ந்தது...
எப்போதும் போல்
இல்லாவிட்டாலும்...
கொஞ்சம் பேசினோம்
என்றாலும்
புன்னகை பூக்காத
உதடுகள் போலியாய்....
எத்தனை வலி...
எத்தனை நிகழ்வு...
இரண்டு பக்கமும்
இழப்புக்கள்
இல்லையென்றாலும்
நம்மில் நம்மை
இழந்ததை அறியாத
சொந்தங்களுடன்
இணைந்தே
பயணிக்கிறோம் இன்று...
எல்லாம் மறந்தோமோ..
மரிக்கச் செய்தோமோ...
தத்தம் துணையுடன்
சந்தோஷமாய்
நகர்த்துகிறோம் நாட்களை....
துளிக்கும் கண்களைச்
சூனியமாக்கி...
விலகி நகர்கிறோம்...
விதியின் பிடியில்
விதிக்கப்பட்ட வாழ்க்கைப்
பயணத்தில்...
மீண்டும் சந்திக்கலாம்
இன்னும் பக்குவப்பட்ட
மனதுடன்...
-'பரிவை' சே.குமார்.