வாழ்க உலகத்தமிழ் செம்மொழி மாநாடு!
இனிதே தொடங்கியது
உலகத்தமிழ் செம்மொழி மாநாடு!
தலைவணங்குகிறோம் தலைவா!
சாதனை! சாதனை!
அளப்பரிய சாதனை!
மகிழ்ச்சி! மகிழ்ச்சி!
மட்டற்ற மகிழ்ச்சி!
ஈழத்தமிழர் எமக்கு
இணையற்ற இன்பம்!
இதோ...சாவைச் சந்தித்த
எம் சகோதரர்கள்
கோவை மாநாட்டுச் செய்தி கேட்டு
மீண்டு வந்த அதிசயம் பாரீர்!
என்ன ஆச்சர்யம்! ......ராசபக்சே
எனும் ராசநாகம் திடீரென
காமதேனுவாக மாறி, தனி ஈழம்
தர தலையசைத்துவிட்டது!
இதோ....இதோ... மாநாடு
தொடங்கிய மறு நிமிடம்
நாங்கள் அடைந்து கிடந்த
முள்வேலிகள் உடைந்தே விட்டன!
செம்மொழி மாநாட்டு
பாடல் கேட்டு
எங்கள் ஒப்பாரிகள்
ஓய்ந்தே விட்டன!
இனி கருத்தரங்கங்கள்
அங்கு நடைபெறும் நேரம்,
இங்கு கருவறுக்கப்பட்ட எம்
தாய்மார்கள் உயிர்பெற்று
வந்து சுகப்பிரசவம் காண்பர்!
அங்கு கண்காட்சி
நடைபெறும் நேரம்,
இங்கு வன்புணர்ச்சிக்கு ஆளான
எமது சகோதிரிகள்
மீண்டும் புனிதம் பெறுவர்!
கவியரங்கம் அங்கு
முடியும் நேரம்,
நாங்கள் வடித்த கண்ணீரும்,
இரத்தமும் இங்கு
காணாமல் போயிருக்கும்!
வெட்டி எறியப்பட்ட
எமது பிள்ளைகளின்
உறுப்புகள் -அங்கு
பட்டிமன்றம் நடக்கும்போது
மீண்டும் வந்து அவர்கள்
உடலில் மீள்குடியேறும்!
விருது வைபவம் அங்கு
நடைபெறும் நேரம் -இங்கு
பறிக்கப்பட்ட எமது
உடமைகள் திருப்பித்தரப்பட்டுவிடும்!
மங்கள ஒலி
அங்கு இசைக்கும்
அதே நேரம் இங்கு
சிங்களக் குடியேற்றங்கள்
எமது பகுதிகளில்
தடுக்கப்பட்டுவிடும்!
அருமை! அருமை!
அருமை தலைவா!
ஆனால் எமது
ஒரே வருத்தம்.......
செம்மொழி மாநாட்டிற்கு
தலைமையேற்க,
ஆணாய் பிறந்த ஓநாய்!
எம் இனத்தை அழித்து
மகிழ்ந்த ராசபக்சே! .....அதாவது..
இலங்கை அதிபர் மகிந்தா ராசபக்சே!
என்கிற மகாத்மாவை
அழைக்க மறந்தீர்களே!
இது எவ்வகையில்
நியாயம் தலைவா!
இவண்,
ஈழத்தமிழனின் ஈனக்குரலில்,
நிலவை.பார்த்திபன்.