எம் ஹெச் 370 - வினோதன்

நீலமும் சிகப்புமாய்
கோடுகள் தவழ
பருத்துப் பெருத்த
வெள்ளைப் பருந்தது
வெளியேப் பறந்தது,
காணமுடியா காரிருளுள் !

சிறகு விரித்த - சில
மணித்துளிகளில்
கண்காணிப்புத் திரைகளின்
கைகளை கட்டிவிட்டு
கை காட்டிவிட்டது,
சில நூறு உயிர்களோடு !

சீன தேசம் நோக்கிய
றெக்கையை- யாரோ
வளைத்து நெளித்து
விடியாத பாதைக்குள்
விழ வைத்துவிட்டனர் !

தலைகாட்டாமலிருக்க
தாழ்வாகப் பறந்த - ஈரிதய
இயந்திரப் பறவை
அடை காத்த - மனிதக்
குஞ்சுகள் - செய்த பாவமென்ன ?

விழுந்து செத்தவர்களுக்காக
இல்லையெனிலும் - விடுதிகளில்
விழுந்து கிடந்தவர்களுக்கவாவது
இறக்கம் கண்பித்திருக்க
வேண்டாமா இறைவா ?
கருத்த இரவென்பதால்
உறங்கிக் கிடந்தாயோ ?

செவ்வாய் நோக்கி
படையெடுக்கும் நாம்
திங்களிலேயே - இயற்கையின்
திமிங்கில வாய்களின்
மாட்டி மடிகிறோம் !
ஒரு திங்கள் முடிந்தும்
தலை சொறிந்தபடி !

வானார உலவிய
போயிங் பறவையின்
செங்கழுத்து நெறித்துச்
செரித்தது - உளவோ
உளவியலோ - கறுப்புப் பெட்டியின்
சிறுமூளையையின் காலடி
மட்டுமே - கண்ட உண்மை !

பாதகம் செய்தது - தீவிர
வியாதிகளெனில் - அம்
மயிர்களின் உயிரழித்து
உடலறுத்தல் உத்தமம் !

கொஞ்சம் சத்தமாகவாவது
கத்தித் தொலையேன்
கருப்பு பெட்டியே - உன்
தொண்டைக்குள் - ஒட்டிக்கொண்டும்
ஓடிகொண்டுமிருப்பது
இருநூறு உயிர்களின்
கசந்த கடைசி கதறல் ...!

தற்காலிக கடவுள்களாம்
ஓட்டுனர்கள் - எமனாக
உருவெடுத்தால் - ஓடியோழிய
இடமேது ? வலமெது ?

(மலேசிய விமானம் MH370 காணாமல்போய் இன்றோடு ஓராண்டு நிறைவு பெறுகிறது :( )

எழுதியவர் : வினோதன் (8-Mar-15, 12:54 am)
பார்வை : 78

மேலே