நண்பர் விண்ணப்பம்
முட்டை மதிப்பெண்பெற்று
முட்டிக்கால் போடுகையில்
முற்றிலும் வருத்தப்படாத
முத்துசாமியே !
கரும்பலகையில்
கந்தசாமி வாத்தியாரை
கார்ட்டூனாய் வரைந்ததற்கு
கால்கடுக்க கடும்வெயிலில் நின்ற
காளிமுத்துவே !
கொடுத்ததெல்லாம்
கொடுத்தான் என்று
வாய்கிழிய பாடும்
வரதராஜனே !
ஷேவ் செய்து வந்த அன்று
செம்ம அடி கொடுப்பாரென
முத்துவேல் வாத்தியாருக்கு
முகலட்சணம் சொல்லும்
முருகேசனே !
கட்டிட வேலைக்காய்
கட்டியிருந்த தண்ணீர்
தொட்டிக்குள் எட்டிப்பார்த்து
தவறி விழுந்தழுத
தங்கவேலுவே !
கவிதைப் போட்டிக்கு
கலந்து கொள்ளச் சொல்லி
கழுத்தை பிடித்துந்திய
கனக ரத்தினமே !
கண்புருவ பென்சில் கொண்டு
அரும்பு மீசை வரைந்து வந்து
வகுப்புத் தோழியரின்
வாய் பொத்திச் சிரிப்புக்கு
ஆளான அழகேசனே !
உங்களையெல்லாம்
தேடுகின்றேன் !
முகநூலில் வந்து
முகங்காட்டுங்களேன் !
மீண்டும் அந்த
முத்தான நாட்களுக்காய்
முயற்சி செய்வோம் !