தடம் மாற்றியப் பண்டிகை
“சிந்து ! இதுல ஏழாயிரம் ரூபா இருக்கு . அம்மாவக் கூட்டிட்டுப்போய் சேலை எடுத்துட்டு வந்துடும்மா .... அடுத்த ஞாயித்துக்கிழமை உன்னப் பொண்ணுபாக்க சென்னை மாப்பிள்ளை வராரும்மா....! “
சிந்துவின் கண்கள் காலண்டரைப் பார்க்க .....ஞாயிற்றுக்கிழமை மாட்டுப் பொங்கல் . “ அப்பா ! நான் ஐயாயிரத்துக்கு சாரி எடுத்துக்கிறேன் . மீதிப்பணம் என் செண்பாக்கு ....!”
“அதுக்கு ஏன்மா ரெண்டாயிரம் ...?
“செண்பாவ நான் ஸ்பெஷலா அலங்கரிக்கப் போறேன் .... நம்ம ஊரிலேயே யாரும் அப்படி ஜோடிச்சிருக்கக் கூடாது ..... ப்ளீஸ்ப்பா .... மறுக்காதீங்க ....!”
“சரிம்மா .... உன்இஷ்டம் !”
ஞாயிற்றுக்கிழமை . வீடே களைக்கட்டியிருந்தது . மாப்பிள்ளை வீட்டார் வருகைக்காக நெய்மணக்க கேசரியும் மெதுவடையும் தயாராயிருந்தது . சிந்து பிங்க்கலர் சாஃப்ட்சில்க் புடவையில் தேவதைப்போல் இருந்தாள் . ராகுகாலத்துக்குள் மாப்பிள்ளை வீட்டார் கிளம்பிவிட்டால் அடுத்து செண்பாவுக்கு அலங்காரம் பண்ணவேண்டும் .... மனதுக்குள் கணக்கு போட்டாள் .
மணி மூன்றரை . வாசலில் இனோவாகார் வந்துநின்றது . ஜன்னல் வழியே விழிகளை ஓடவிட்டாள் சிந்து ! ராஜகளையுடன் பையனின் முகம் தெரிந்தது . பையனோடு அப்பா , அம்மா வந்திருந்தனர் .
வாங்க ... வாங்க ....என்று சிந்துவின் பெற்றோர் வரவேற்றனர் . பின்னால் தொடையில் கைவைத்து சாய்த்து நடக்கும் பையனைப் பார்த்ததும் பகீரென்றது . என்னதான் வசதி , அழகு என்றாலும் ஊனமான பையனை தன்மகளுக்கு மாப்பிள்ளையாய் நினைத்துப் பார்க்க மனம் இடம்தரவில்லை . இருந்தாலும் வரவேற்று உபசரித்தனர் ஏமாற்றத்தை மறைத்தபடி !
உள்ளேவந்த சிந்துவின் அப்பா ....”சிந்தும்மா ! எங்களுக்கே தெரியாதும்மா பையனுக்கு கால் ஊனம்னு ....புரோக்கர் சொல்லவேயில்லைம்மா ....! இவ்வளவு தூரம் வந்துட்டதால அவங்க பாத்துட்டுப் போகட்டும் .... அப்புறம் நாம சாக்குசொல்லி தட்டிக் கழிச்சிடலாம் .... என்னை மன்னிச்சிடும்மா ....!”
சிந்துவின் முகத்தில் எந்தச்சலனமும் இல்லை .ஜன்னல் வழியே தொழுவத்தில் கட்டப்பட்டிருந்த லட்சுமியைப் பார்த்தாள் . விழியோரம் கண்ணீர் முத்தாய் திரண்டிருந்தது . அவள் நினைவுகள் ஐந்து வருடங்கள் பின்னோக்கிச் சென்றது .
லட்சுமி தாயான பூரிப்பில் இருந்தது . அருகில் செண்பா ! தாய்மடிமுட்டி பசியாறிக்கொண்டிருந்தது . மாட்டுப்பொங்கல் ஆனதால் மஞ்சள் குங்குமம் வைத்து , பூமாலை கழுத்திலாட , வண்ணத்துணி உடல்மறைக்க , கொம்புகளில் வர்ணம் தீட்டி , கால்களில் சலங்கை ஒலிக்க மங்களகரமாய் நின்றிருந்தது .
விளையாடிக்கொண்டிருந்த ரவி சிந்துவிடம் ,” லட்சுமிக்கு வால் எவ்வளவு நீளமா இருக்கு ....முடியும் கருகருன்னு ....இந்த வாலுல பட்டாசுகட்டி பத்தவச்சா எப்படியிருக்கும் ....?”
“பாவம்ண்ணா லட்சுமி !”
“பேசாம வேடிக்கபாரு ...!”
ஊசிவெடிச்சரத்தை ரப்பர்பேண்டில் சுற்றி வாலில் மாட்டிவிட்டான் ரவி . மெதுவாய் பின்புறம் சென்று பற்றவைக்க மிரண்டுபோன லட்சுமி திமிறித்திமிறி குதித்தது . பயந்து பாய்ந்து ஓடியதில் கட்டைச்சுவர் இடித்து பலத்தஅடி ! ரத்தவெள்ளம் . டாக்டர் வைத்தியம் பார்த்தும் நொண்டிநொண்டிதான் நடந்தது .
அதிர்ச்சியில் உறைந்த சிந்து அன்றிலிருந்து உயிருக்குயிராய் லட்சுமியையும் செண்பாவையும் பேணிவந்தாள்.
கண்ணீர் முத்துக்கள் கையில்விழ நினைவுகளின்றும் விடுபட்டாள் .
“அப்பா ! இவரையே பேசி முடிச்சிடுங்கபா !”
“வேண்டாம்மா ....உன் அழகுக்கும் தகுதிக்கும் வேறவரன் பாக்கலாம்மா ....!
“ அப்பா !இவருக்கு என்றைக்கும் ஊன்றுகோலா நானிருப்பேன் .... என்மனசுல பதிஞ்ச குற்றவுணர்வும் மாறி என்வாழ்க்கை நல்லாருக்கும்பா ....நீங்க கவலப்படாதீங்க ....!”
விழிநீர் பெருக்கெடுக்க லட்சுமியைப் பார்த்தாள் .