பூஞ்சோலைக் காவலன்

திரண்டுவரும் ஆசைகளின் தெருவுக்குள் நுழைந்து
==திருவிழாவாம் வாழ்வென்னும் தேரதனை இழுக்க
வரங்கேட்டுத் தவமிருக்கும் வனிதையர்கள் தொழுது
==வாசல்படித் தாண்டாத விரதங்கள் பூண்டு
சிரத்தையுடன் செய்கின்ற சிவபூஜைக் காண
==சிறப்பாக வருகின்ற சிருங்காரக் கரடி
மிரண்டுவிடும் வகையினிலே மெல்லிதழைத் திறத்து
==மெதுவாகக் கேட்பானே சீர்வரிசை விருந்து.

விருந்தாகக் கேட்டவனின் விருப்பங்கள் கண்டு
==வெயிலோடும் மழையோடும் போராடி உழைத்து
அரும்பாடு பட்டப்பன் சேமித்த தெல்லாம்
==அவனுக்கு வழங்கிட முன்வந்து பெண்ணைத்
திருமண கோலத்தில் கண்டுவிடத் துடித்து
==தேய்வானே செருப்பாக தெருவோடு நாளும்.
கரும்புண்ணத் தேனள்ளிப் போகின்றக் குரங்குக்
==கைக்குள்ளே பூமாலை யாவாளே கன்னி.

மாமனெனும் மாமரத்தில் மாங்காய்கள் பறித்து
==மணவாழ்க்கை சந்தையிலே மலிவாக விற்றே
சாமத்திலும் ஏமத்திலும் சாத்தானின் உறவாய்
==சாராய போத்தலுடன் சரசங்கள் கொண்டு
காமத்துக்கு வேறொருத்திக் கைபிடிக்கும் பொல்லாக்
==காதகர்கள் கத்தியின்றிக் கழுத்தறுத்துக் கொல்லும்
ஊமைத்தன நாடகத்தை அரங்கேற்றிப் பிழைக்கும்
உயிரிருந்தும் ஜடமாகித் திரிகின்றார் மண்ணில்

செய்வதற்குத் தொழிலென்று எதுவுமற்றப் போதும்
==செயலாளர் பதவியிலே இருப்பதுபோல் தங்கள்
மெய்யுருக மேலோர்போல் பாவனைகள் காட்டி
==மினுக்குகின்ற மின்மினியை நிலவென்று நம்பி
தெய்வமது பிள்ளைக்கு தேர்ந்தெடுத்துத் தந்த
==தேவனெனக் கொள்கின்ற தீர்மானம் தவிர்த்து
பொய்யர்களை இனங்கண்டு பெண்பிள்ளை வாழ்க்கை
==பூஞ்சோலை காவலனை புடமிடுவீர் நன்றே!
*மெய்யன் நடராஜ்

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (இலங்கை) (13-Mar-15, 2:58 am)
பார்வை : 80

மேலே