கட்டுமரம் என்னாச்சோ
கட்டுமரறேி கடலுக்குள்ள போனவரு
கடந்து பல வாரமாச்சு!
காசு இங்க தீந்துபோச்சு!
கரையோரம் நானி்ன்னு கடலுக்குள்ள கண்ணவிட
கடலுமட்டும் தெரியுதம்மா
கட்டுமரம் காணலியே!
அடுப்பேத்தி சோறு வச்சு -வெந்த
சோறும் கொழஞ்சு போச்சு!
சோறுதின்னக் காத்திருந்த
கொழந்தைங்களும் வாடிப்போச்சு!
கரையோரம் நானின்னு
கடலுக்குள்ள கண்ணவிட
கடலுமட்டும் தெரியுதம்மா
கட்டுமரம் காணலியே!
பூ தொட்டு வச்சவரே ஒன்
முகத்தப் பாக்காம
வான்முட்ட நின்ன சோகம்
வதைக்குதய்யா எம்மனச
கரையோரம் நானின்னு
கடலுக்குள்ள கண்ணவிட
கடலுமட்டும் தெரியுதம்மா
கட்டுமரம் காணலியே!
விடிஞ்ச பொழுதெல்லாம்
விடியாத வாழ்க்கையாச்சு!
வீசுற காத்துகூட வீசி வீசி கலைச்சுப்போச்சு!
கரையோரம் நானின்னு
கடலுக்குள்ள கண்ணவிட
கடலுமட்டும் தெரியுதம்மா
கட்டுமரம் காணலியே!
தூங்கி எழுந்ததுமெ துடிதுடித்து ஓடிவந்தா நாபெத்த தலப்புள்ள!
நாசெய்தி கேட்டேம்மா
கட்டுமரத்தோட கூட்டிக்கிட்டு போய்ட்டாங்களாம் காணாத் தெசைநோக்கி!
அய்யோ என்ன செய்ய?
யாருகிட்ட நா கேக்க?
கடலம்மா நீசொல்லு
உன்கிட்ட கேக்கட்டுமா?
வான்மிதக்கும் சூாியனே
வாய்திறந்து சொல்லுவியா?
கடலுக்குள்ள எல்லையின்னு கட்டிவச்ச சுவரு உண்டா?
காத்தடிச்சு கடலுத்தண்ணி
எல்லதாண்டிப் போகலியா? தண்ணிமட்டும் தாண்டிவந்தா தவறு யாரும் கண்டதில்ல ! தண்ணி தாண்டி தமிழன் வந்தா தண்டனைக்கு குறைவுயில்ல!!
தமிழச்சியா நாபொறந்து தவிக்கிறனே கரையோரம்! தட்டிக்கேக்க அரசாங்கம் தடுமாறுதே இந்நேரம்!!!
கலர்கலரா கடசிவேட்டி கட்டிக்கிட்டு வந்தவங்க கருப்புக்கொடி காட்டிக்கிட்டு கன்டனமுன்னு சொன்னாங்க, கருப்புக்கொடி ஏதுக்குன்னு இப்போதான் புரியுதய்யா!!!!!
உள்சூழ்ச்சி தெரியாம உயிரற்று நாங்க நிக்க! கருப்புக்கொடி கொண்டு கட்டாம கட்டிட்டாங்க களங்கி நின்ன எங்க கண்ண!!!
கரையோரம் நானின்னு கடலுக்குள்ள கண்ணவிட கடலுகூட தெரியலியே கட்டுமரம் என்னாச்சோ ????????????
_இளஞாயிறு பாண்டியன்