ஒரு பாசம் பாரமாகியது

கருவில் சுமக்கையில் பாரமில்லை
வயிற்றில் நீ உதைக்கையில்
வலிக்கவும் இல்லை .
வருடி வருடி ரசித்தேன் .
வயிற்றில் உன் துடிப்பை
உணர்ந்து உணர்ந்து மகிழ்ந்தேன்.
பத்துத் திங்கள் பக்குவமாய்
நாட்கள் எண்ணி காத்திருந்தேன்
வந்தது அந்த பொன்னாள்
தாய்மை
மரணத்தோடு போராடும் ஓர் நாள்
நீ மண்ணை பார்த்த அந்நாளில்
இந்த அன்னை பட்டதை உணர்வாயா?
குருதியும் குடலோடு வெளியேற
பெண்ணுடல்
புண்ணாய் போனதை அறிவாயா.?
உன் அழுகுரல் கேட்ட மறுநொடியே
அள்ளி அணைத்தேன் அன்பே என்று
அனைத்து வலியும் பறந்தோட
உயிரே சிரித்தேன் உன்னை பார்த்து .
தொட்டிலும் கட்டிலும் வேண்டாம்
என்று
மெத்தையாய் உன்னை
நான் சுமந்தேன் .
மாதங்கள் வருடங்கள் ஆனா பின்னும்
தாய் பால் குருதியாய் ஆனா பின்பும்
சப்புக் கொட்டி நீ குடிப்பாய் -உன்
உச்சி முகர்ந்து நான் ரசித்தேன்.
குறும்பாய் நீ கொடுத்த துன்பங்கள்
வடுவாய் இன்னும் உடலில் உண்டு
குழந்தை உந்தன் கொஞ்சலினால்
துன்பங்கள் இனித்தது இன்பமென .
வளர வளர தெரிந்து கொண்டாய்
தாயவள் பாரம் என
புரிந்துகொண்டாய்
கொண்டவள் உறவாய் வீடு வர
என்னை
குப்பையை போல்
வீதியில் வீசி விட்டாய் .
மகனே
நெஞ்சில் உன்மேல் வஞ்சம் இல்லை
கண்ணே உன்னை வெறுக்கவுமில்லை .
சுகமாய் சுமந்தவள் சுமையானேன்
முதுமையில் மீண்டும் தனியானேன்.
பாசம் இன்று பாரமாய் போக
நெடும்பாதை ஓரத்தில்
நடைபிணமாய் நான்.!!!!