யாருக்கு தெரியும் - கருணா

அந்த கட்டிலில் அவன்
வரிசையில் கடைசியாய்
மருத்துவ மனையினில் ..
ஆறு மாதங்களாய்..!

அவன் நினைவுகள்
மொழியாகி ..சொல்லாகி
வெளிவர இயலாமல்
முடங்கிய நாட்கள்..!

சன்னலில் தெரியும்
மேகங்களின் யானை
குதிரைகள் பூட்டிய தேர்
கைநீட்டியபடி குழந்தை
வடிவங்கள்..அவனுக்கு
நண்பர்கள்..!

தினம் தினம் அவனையும்
அடுத்தடுத்த கட்டில்களையும்
விசாரித்துப் போகும்
வேப்ப மரத்தின் காற்று ..
எல்லாம் மறைந்து போகும்
நாளையோடு..!

விரிவாக்கம் எனும் பேரில்
எல்லா மரங்களையும்
வெட்ட உத்தரவாம்..கட்டிட
ஒப்பந்தக்காரருக்கு ரெட்டிப்பு
மகிழ்ச்சி..லாபத்தை எண்ணி..!

சன்னல்களும் அடைக்கப்பட
வடிவமைப்பு மாற்றமெனும் பேரில்..
அவன் நாட்கள் கணக்கிடப் படுவதாய்
பேச்சு அங்கே.
அழுதான்..

அது அவனது
முடிவுக்காக ..
இல்லை...
நிச்சயமாய் ..அது
அவனுக்கு மட்டுமே
தெரியும்..
அதிக பட்சம் ..
அந்த சன்னல்களுக்கும்
மரங்களுக்கும்
தெரியும்..!

எழுதியவர் : கருணா (5-Apr-15, 9:27 pm)
பார்வை : 214

மேலே