புரியாமல் நின்றேன் ……

பிறப்பிடத்தை எட்டி உதைத்து உந்தி
பிறந்தாயே இவ்வுலகைக்காண
உன் முன் வரிசைப் பற்களைக் கொண்டு
உணவு உண்ணும் அழகுக்கு ஈடு இணையுண்டோ

உன் மழலை இசையைக் கேட்க
உன் அருகில் தினமும் காத்திருந்தேனே
உன் கொஞ்சும் தமிழைக் கேட்க
உனக்காகவே பிறந்தேன் என்று எண்ணினேனே
உன் சிரிப்பின் அழகைக்காண
உன் அடிமையானேனே நான்

உன் பிஞ்சுவிரல் என் கைவிரலைப் பிடித்து - நீ
உற்சாகமாக நடக்கும் பொழுது அத்தனை மகிழ்ச்சி கொண்டேனே
உனக்கு புத்தாடை உடுத்தி தினமும் அழகுப் பார்க்கும் போது
உடம்பு வலி இருந்தால் கூட சிட்டாகப் பறந்துபோகுமே
உன் தூக்கத்திற்காகவோ என்னவோ தெரியவில்லை – என்
உயிர் நாடியும் துடிக்கும் இதயத்துடிப்பாகவே

உனக்காகப் பிறந்தேன் வாழ்கிறேன் என்று
கர்வம் கொண்ட எனக்கு
எனக்காக வாழப்போகிறேன் என்று
கல்லறையில் அனுப்பிருந்தால் கூட சந்தோஷப்பட்டுருப்பேன்
சத்தமே இல்லாமல் சற்றும் சிதறாமல்
சாதித்துவிட்டாயே உன் ஆசைப்படி

பிறப்பிடத்தை எட்டி உதைத்து உந்தி
பிறந்தாயே இவ்வுலகைக்காண
சிறிதும் வலிக்கவில்லை
சிறுதுளி கண்ணீரும் வரவில்லை - இன்றோ
சற்று அதிகமாகவே வலிக்கிறதே
ஒன்றும் புரியாமல் நின்றேன்
முதியோர் இல்லதின் வாசலில் ……!

எழுதியவர் : ராஜா (6-Apr-15, 2:43 pm)
சேர்த்தது : ராஜா
பார்வை : 194

மேலே