மின்சாரப்பூவே

"மின்சாரப்பூவே....."
===========================================ருத்ரா

ஒரு காக்கை.
மூக்கால் கீறி கீறி
மின் கம்பியை கிச்சு கிச்சு மூட்டியது.
அப்புறம்
சட்டென்று
அருகில் உள்ள வேப்பங்கிளைக்கு
தாவியது.
வால் குஞ்சம் தூக்கி
கூரிய பல் காட்டி
கிச் கிச் கிச் என்று ஒலித்த
அணிலோடு மல்லுக்கு நின்றது.
அதன் மிளகுக்கண்ணுக்குள் எதைப்பார்த்ததோ
மறுபடியும்
எதற்கு காத்திருக்கிறோம் என்று
நினைவுக்கு வந்ததாய்
மின் கம்பிக்கே திரும்பியது.
காத்திருப்பு எனும்
காக்காய் முள் அந்த காக்கையையே
கழுவில் ஏற்றிக்கொண்டிருப்பது போல்
அது துயரம் உற்றது.
சடாரென்று சிறகை பரப்பியதில்
இரண்டு கம்பி ஸ்பரிசத்தில்
அது உயிரை விட்டு
அங்கேயே தொங்கியது.
சில நிமிடங்களில்
நூற்றுக்கணக்காய் அங்கு காக்கைகள்!
"ஹிட்ச்காக்"அனுப்பி வைத்திருப்பார் போலும்.
அந்த ரோட்டிலும் கூட்டம்
ஈசல்கள் போல் அப்பியிருந்தன.
அப்போது தான் ஆம்புலன்ஸ் ஒன்று
விழுந்து கிடந்த
யாரோ ஒரு இளைஞனை
அப்புறப்படுத்திக்கொண்டு போனதாம்.
நீண்ட நேரமாய் அங்கே நின்றவன்.
சூரியனின் நூத்திரெண்டு டிகிரியைக்கூட
ஜூஸ் ஆக்கி
நின்று நின்று நேரத்தைக்குடித்தவன்.
சன்ஸ்ட்ரோக்காய் இருக்கும் என்று
கூட்டம் கலைந்தது...
அங்கே கொஞ்ச தூரம் தள்ளி..
ஒரு செல் கிணு கிணுத்துகொண்டே
அதிர அதிரக்கிடந்தது.
அதில் ரிங்க் டோன் பாடிக்கொண்டிருந்தது.

"மின்சாரப்பூவே....."

======================================================

எழுதியவர் : ருத்ரா (10-Apr-15, 6:24 pm)
சேர்த்தது : ருத்ரா
பார்வை : 53

மேலே