பெண் ஒன்று கேட்டேன்
பெண் குழந்தை வேண்டுமென்றே
பெருந்தவம் கிடக்கின்றேன் - அந்த
அல்லி மலரை அள்ளி அணைக்க
அருந்தவம் புரிகின்றேன்.
அழுதுகொண்டே மகள் பிறப்பாள்
ஆகாயத்தில் நான் பறப்பேன்
பால்வடியும் பூமுகத்தைப்
பார்த்துக்கொண்டே பசிமறப்பேன்.
உள்ளங்கையில் அவளை ஏந்தி
உள்ளம் மகிழ்ந்து ரசித்திடுவேன்
உச்சி முகர்ந்து உற்று நோக்கி
உச்சந்தலையில் முத்தமிடுவேன்.
பொன்மகளின் புன்னகையில்
கண்மூடிக் களித்திருப்பேன்
அவனியிலே அவள் நடந்து
பவனி வரப் பார்த்திருப்பேன்.
காதலியின் பெயர்சூட்டிக்
காலமெல்லாம் கூப்பிடுவேன்
நிலவைக் காட்டி சோறூட்டி - அதில்
நானும் கொஞ்சம் சாப்பிடுவேன் .
கண்மணியவள் கண்ணுறங்க
கண்ணிமையால் விசிறிடுவேன்
காதோரம் கானம் பாடிக்
காலடியை வருடிடுவேன்.
பள்ளி செல்லும் புள்ளிமானை
தள்ளி நின்று தரிசிப்பேன் - அவள்
கடவுள் வாழ்த்தை பாடும் அழகில்
சிலையாகி நான் நிற்பேன்.
ரெட்டை ஜடை பின்னலிட்டு
ஒற்றை ரோஜா சூட்டிடுவேன் - அவள்
பூஞ்சிரிப்பின் எழில் கண்டு
பாசுரங்கள் பாடிடுவேன்
சைக்கிள் ஏறி அவள் சுற்ற
சக்கரமாய் ஓடிடுவேன் - அவள்
ஒளிந்து விளையாடும்போதும்
அக்கறையாய்த் தேடிடுவேன்
கடைகடையாய் நான் நடந்து
உடைவாங்கி உடுத்த வைப்பேன்
எடைக்கு எடை பொன் வாங்கி
என் தேவதையை அலங்கரிப்பேன்.
பூவுக்கு அவள் ஆசைப்பட்டால்
பூந்தோட்டம் அமைத்திடுவேன்
மயிலிறகு வேண்டுமென்றால்
மயில்கூட்டம் வரவழைப்பேன்.
பருவமடையும் நிலை வருவாள்
பதற்றத்துடன் நான் மகிழ்வேன் - அது
பிரியும் நிலையின் முதற்படியென
அறிந்தபின்னே நான் அழுவேன்.
உயர்கல்வி அவள் பயில
துயர் எதுவும் தாங்கிடுவேன்
அயல்நாடு அனுப்பிவைக்க
புயல்போல உழைத்திடுவேன்
காதலிக்க அவள் நேர்ந்தாலும்
மறுதலிக்க மாட்டேன் நான்- அவள்
மனம் தேடும் மன்னவனை
மனமுவந்து மணம் முடிப்பேன்
தெருவெல்லாம் பந்தலிட்டு
திருநாள்போல் மாற்றிடுவேன்
மங்கலமாய் இசை முழங்க
மணமேடை ஏற்றிடுவேன்
கணவனோடு போகும் அழகை
கண்ணார அனுபவிப்பேன்
கட்டில் பீரோ நகைகளுடன்
கண்ணீரையும் அனுப்பிவைப்பேன்
விதி தரும் பிரிவை எண்ணி
விழிகளில் நின்றிடும் நீர்தான்
செல்ல மகள் செல்லும் நொடியை
நல்ல நேரம் என்றது யார்தான்?