இலக்கிய இமயம் ஜெயகாந்தன் கவிஞர் இரா இரவி

இலக்கிய இமயம் ஜெயகாந்தன்!
கவிஞர் இரா .இரவி !

கடலூரில் பிறந்த இவர் கதைக்கடல்
சென்னையில் சிறந்த இவர் இலக்கியக்கடல்

தந்தை தண்டபாணி இராணுவ அதிகாரி என்ற போதும்
தன் மனதில் பட்டதை செய்து வளர்ந்தவர் !

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் போலவே
பல தொழில்கள் செய்து வாழ்வை கற்றவர் !

முருகேசன் என்பது இயற்பெயராக இருந்த போதும்
ஜெயகாந்தன் ஜெ.கே. என்றே அறியப்பட்டவர் !

அய்ந்தாவது மட்டுமே படித்து இருந்த போதும்
அளப்பரிய ஆற்றல் எழுத்தில் கைவரப்பட்டவர் !

கல்விக்கும் கருத்துக்கும் தொடர்பில்லை என்பதை
கதைகளின் மூலம் நிரூபித்துக் காட்டியவர் !

முற்போக்குச் சிந்தனைகளை கதைகளில் வடித்து
முத்திரைக் கதைகளின் மூலம் தனிமுத்திரை பதித்தவர் !

ஞானபீடம் என்ற உயர்ந்த விருது பெற்றவர் !
ஞானபீடம் விருதுக்கே பெருமை பெற்றுத் தந்தவர் !

கொள்கைகளை மாற்றிக் கொண்டே போதும்
குணங்களை மாற்றிக் கொள்ளாத பண்பாளர் !

நாவல்கள் திரைப்படங்கள் ஆன போதும்
நானே பெரியவன் என்று என்றும் சொல்லாதவர் !

மனதில் பட்டதை மறைக்காமல் உரைத்தவர்
மனது புண்படும் என்ற கவலை கொள்ளாதவர் !

எவ்வளவு பெரிய மனிதராக இருந்தாலும்
எதிர்கருத்து இருந்தால் பேசிடத் தயங்காதவர் !

கோடிக்கணக்கான வாசகர்களைப் பெற்றிட்ட
கதையரசன் பேச்சில் கதை விடாத மாமனிதன்!

மகாகவி பாரதியாரை மிகவும் நேசித்தவர்
மட்டற்ற எழுத்தால் மகுடம் சூடியவர் !

மக்கள் மனங்களை எழுத்தால் கவர்ந்தவர்
மக்கள் மனங்களைப் படம்பிடித்துக் காட்டியவர் !

பணக்காரன் ஏழை பாகுபாடு பார்க்காதவர் !
பாராட்டும் ரசிகரை ரசிக்கும் நல்லவர் !

எழுதுகோலின் வலிமையை உலகிற்கு உணர்த்தியவர் !
எழுத்தால் உள்ளங்களைக் கொள்ளை கொண்டவர் !

எழுத்தாளருக்கு உரிய கம்பீரத்தை அவர்
என்றுமே கட்டிக் காத்து வந்தவர் !

மறக்க முடியாத மாண்புமிக்க கதைகளை
மக்களுக்கு வழங்கி மனங்களில் வாழ்பவர் !

இறுதி வரும் வரை எழுதி விட்டாலும்
எழுதிய யாவும் இறுதிக்குப் பின்னும் நிலைக்கும் !

தமிழை அறிஞர்களைப் பழித்தப் போது முரண்பட்டேன் !


தமிழ் வளர அவர் ஒரு காரணமானதால் உடன்பட்டேன் !

கெட்டப்பழக்கங்களில் சில பழகாமல் இருந்திருந்தால்
கொஞ்சம் கூடுதலாகவே வாழ்ந்து இருப்பார் !

உடலால் உலகை விட்டு மறைந்திட்ட போதும்
உன்னதமான பாத்திரப் படைப்புகளால் வாழ்கிறார் என்றும் !

ஈடு செய்ய முடியாத இழப்பு உண்மை
இணையற்ற எழுத்தாளர் அவர் உண்மை !

எழுத்துக்களால் வாழும் ஆளுமைக்கு அழிவில்லை !
இலக்கிய இமயம் என்றால் மிகையில்லை !

எழுதியவர் : கவிஞர் இரா .இரவி (10-Apr-15, 10:30 pm)
சேர்த்தது : கவிஞர் இரா இரவி
பார்வை : 133

மேலே