மழை பெய்த நேற்றயப் பொழுதில்-7
ஆயிரம் சொல்லுதடி
உன் பார்வை
எதுவென நான்
கொள்வேன்?
வழிகின்ற உந்தன்
கண்ணீரை நான்
துடைத்து சற்றே
தலைதூக்கியடி...
மௌனம் இன்னும்
கலைந்தபாடில்லை
நம்மிடையே.
இறுகப்பற்றும்
உந்தன் விரல்கள்
என் கைவழியே
கடத்துகிறது அன்பே-உன்
இதயத்து மொழிகளை
கொஞ்சம் கொஞ்சமாய்.
அப்படியா என்கிறேன்.
ஆம்
அன்று மழை பெய்த
பொழுதொன்றில்
நீ கொடுக்க ஆரம்பித்த
முத்தங்கள் இன்று
என்னுள் உயிராய்
என்கிறாய்.
உலகத்து கவிஞர்கள்
எல்லோருக்கும் ஒரு
சவால் விடுகிறேன்
ஒரு பக்க கண்ணீர்
உன் மேல் உதட்டை
தீண்டி சிரி என
உந்தியது போல்
மீச்சிறிய அளவு
இப்போது நீ
இதழ் விரித்ததற்கு
ஒரு உவமையை
சொல்லிவிட முடியாது.
என் மடியில்
அமர்ந்திருக்கும்
நம் பிள்ளையின்
தலையை வருடியவாறு
பிறகேன் கண்ணீர்
என கேட்கிறேன்.
உன் கழுத்துச் சங்கு
இருமுறை மெள்ள
மேலும் கீழும்
சென்று வந்த பின்
கேட்கிறாய்
உன்
சம்பளம்
பத்துமா?
--கனா காண்பவன் (மழை தொடரும்)