இரவு காவலன்
மாதத்தின் முதல் வாரத்தில்
மறவாது வருவானவன் ...
வந்தவுடன்
விரைப்பாகவொரு
சல்யூட் வைப்பான்
இருபது ரூபாய் பெற்றுக்கொண்டு
இன்முறுவலுடன் நகர்வான் ..
மறு சந்திப்பு
மறு மாதத்தில் நிகழும்
மறுபடியும் ...
இரவு நேரத்தில்
ஏதாவது வாசித்துக்கொண்டோ
எழுதிக்கொண்டோ
நான் விழித்திருக்கையில்
தெரு நாய்களின் ஓசைகளை
மௌனிக்கவைத்து பயணிக்கும்
அவனின் விசில் சப்தம் ...
அன்றிரவு எதேச்சையாய்
வெளியூர் சென்றுவிட்டு
நடுநிசியில்
வீடு திரும்பியபின்
மனைவியின்
மறுக்கமுடியாத அன்பினால்
இரவு உணவருந்த
அமர்ந்தபோது வந்தானவன் ...
அவ்வேளையில்
எனைக்கண்டவுடன்
மனம் திறந்தவொரு சிரிப்பு
மறுபடியும் ஒரு சல்யூட்
ஆனால்
அவன் கண்களில்
அன்று நான் கண்ட
அந்த புதியவொளி
சப்தமில்லாமல்
என்றோ வாசித்த வரிகளை
என்னுள் கிளறியது ஏனோ
'' என் கடன் பணிசெய்து கிடப்பதே ''
------------------------------------------------------------------------------------------
குமரேசன் கிருஷ்ணன்