யுகம் தாண்டும் சிறகுகள்19 -- பொள்ளாச்சி அபி

“கிறுக்கல் வாழ்க்கையில்

று
க்
கி

எங்களின் விதிக்கோடுகளை
யார்தான்
ஓவியமாக்கப் போகிறீர்கள்..?”
-------

“ஒன்றே தெய்வம் என்றுரைக்கும்
உத்தமர்கள்..
தமக்குத் தொண்டு செய்கிற
சாம்பானை..
ஊர்க்குளத்தில் நீரெடுக்க
விடுவதில்லை
ஏன் எனில்
குலம்வேறு, குளம்வேறு..!”
-----

“அனுதினமும் பட்டினியால்
அல்லாடும் எங்களை
யாருக்கும் தெரிவதில்லை.
அரசியல்வாதியின் உண்ணாவிரதம்
நாட்டுக்கே தெரிந்துவிடுகிறது.!”

--------

“வரவு பிரேக்போட்டு
நிற்கும்போது
செலவு மட்டும்
ஆக்சிலேட்டரை
அழுத்தித் தொலைக்கிறது.?” - வாழ்க்கையைப் பிரதிபலிக்கின்ற இந்தக் கவிதைகள் கடந்த சிலஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்டவைதான்.எனினும் இன்றைக்கும் இதுபோலவே எழுதித்தீர்க்க வேண்டியதாகத்தான் இருக்கிறதா..? என்ற கேள்வி எழுந்தால்,ஆமாம் என்பதுதான் எனது பதில். காரணம்,காலண்டரில் ஆண்டுகள் மாறியிருக்கிறது.சூழல் மாறியிருக்கிறதா..? என்று கேட்டால் இல்லையென்றுதான் நீங்களும் ஒத்துக் கொள்வீர்கள்.

“இந்தியாவின் வறுமையை படமாக எடுத்து வெளிநாடுகளில் விற்பனை செய்கிறார்..” என்று திரைப்பட இயக்குனர் சத்யஜித்ரே மீது அவர் காலத்தில் சிலர் ஒரு குற்றச்சாட்டை வைத்தார்கள். அவர்கள், “ஒரு தேசத்தின் கௌரவத்தை அதன் இலக்கியங்களே வெளிப்படுத்தும்..! என்பதை அறியாதவர்கள் என்றேதான் சொல்லவேண்டும்.

உண்மையான இலக்கியவாதிகள் ஒரு தேசத்தை திட்டமிட்டு சீர்குலைத்து விடமுடியாது. மாறாக அவர்களின் எண்ணத்தைப் பரிசீலிக்க அரசுகள் முன்வருமானால்,நாடு முன்னேறும் என்று வேண்டுமானால் சொல்லலாம். காரணம்,அவன் நாடு என்பது வெறும் நிலப்பரப்பு அல்ல.அங்கு வாழும் மக்கள் என்று அறிந்தவன்தான். அவர்களில் ஒருவனாக வாழத் தலைப்பட்டிருக்கிற படைப்பாளி,அவர்களின் நலன் சார்ந்தே சிந்திப்பதும் செயல்படுவதும்தான் இயல்பு.அந்த சிந்தனையும்,செயல்பாடும்தான் அவனது படைப்புக் களமாக இருக்கும்போது,அவனது படைப்புகள் மட்டும் எப்படி யதார்த்தத்திற்கு முரணாக வெளிப்படும்..?

நம் தளத்தில் தமிழ்தாசன் என்றொரு தோழர் அவ்வப்போது வந்து,அன்றைய சூழல்,அரசியல் குறித்து சில கவிதைகள் எழுதுவார்.அதிகமாக அவர் வராமல் இருப்பது ஏன்.? என்று சில காரணங்களை நான் அறிந்திருந்தாலும்,அவரது திருமணத்திற்கு சென்றபோதுதான் அவரது தொடர்புகளும்,பணிகளும் குறித்து முழுமையாக அறிந்துகொள்ள முடிந்தது. மக்கள் நடுவே,மக்களுக்காக அவர் பணியாற்றும் களங்கள் மிகப்பெரிது. களப்பணியாற்றுவதன் இடையே கிடைக்கும் இடைவெளியில்தான் அவர் கவிதையும் எழுதுகிறார் என்று அறிந்துகொண்டபோது..எனது பிரமிப்பு இன்னும் நீங்கவில்லை.! கவிஞனாக இருப்பதைக் கடந்து நல்லமனிதனாக இருக்கும் அவரின் கவிதைகள் எனக்குள் ஏற்படுத்திய பாதிப்புகளைப்போன்றே,தோழர் ராம்வசந்தின் சில கவிதைகளை வாசிக்கும்போதும் கிளர்ச்சியுற்றேன்.

வாருங்கள்..தோழர்.ராம்வசந்த்தின் கவிதைகள் சிலவற்றில் பயணிப்போம்.

இருதரப்புக்கு இடையே தகராறு.விசாரணையில் யார்மீதும் குற்றம் சொல்லக்கூடிய காரணங்கள் இல்லை. ஆனால்,ஒரு பிரச்சினை அல்லது சிக்கல் மட்டும் நடைபெற்றதென்னவோ உண்மை.அப்படியானால் அதற்கு என்ன காரணம் இருக்க முடியும்..?

கவிதையில் இதையெல்லாம்கூடவா பேசமுடியும்..என்று நீங்கள் கேட்டால் பேசமுடியும் என்று சொல்லி,அதற்கான காரணத்தையும் அவர் சொல்லும்போது,அட..என்று ஆச்சரியப்பட்டுப் போகிறது மனது.வாய்மை என்ற தலைப்பிலான தோழர் ராம்வசந்தின் கவிதை நறுக்கென்று விடைசொல்கிறது.

“இப்பக்க கதைகளும்
அப்பக்க காரணங்களும்
தப்பாக இல்லாமல்
சரியாகவே இருப்பினும்
வாய்மை எனப்படுவது
யாதெனில்
யாரும்
சொல்லாமல் விட்ட ஒன்று.!” - இந்தக் கவிதையை வாசித்தபோது,வாய்க்காத் தகராறோ அல்லது ராமஜென்மபூமி-பாப்ரி மஸ்ஜித்தோ..,தாலி அகற்றலாமா கூடாதா..? அணு உலை தேவையா தேவையில்லையா..? என்ற விவாதம் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது,கனடாவிலிருந்து யுரேனியம் இறக்குமதி செய்ய இந்தியா ஒப்பந்தம் போடுவதும்.., இதில் எந்தவொரு பிரச்சினையாக வேணும் இருக்கட்டும்.அதனை பொதுவான ஒரு சூத்திரம்போல இந்தக் கவிதைக்குள் அடக்கிவிடலாம் என்பதுதான் இந்தக் குட்டிக் கவிதையின் சிறப்பு.இதுபோல கவிதைகள் அமைவது அதிசயம்போல எப்போதாவதுதான் நிகழ்கிறது.அது அதிசயம் என்பதாலேயே,அதன் பிரம்மாண்டம் மனதிற்குள் நிலைபெற்றுவிடுகிறது.

கடந்த சில பத்தாண்டுகளுக்கு முன்புவரை,தமிழகத்திற்கேயுரிய பண்டிகை, திருவிழா.. என்றாலே கொண்டாட்டத்திற்கான ஒரு விஷயமாகத்தான் இருந்து வந்தது.உறவுகளின் ஒட்டுமொத்த வரவு,பரஸ்பர நல விசாரிப்புகள்,பகிரந்து கொள்ளப்படும் மகிழ்ச்சிகள்,துக்கங்கள் என்பது மட்டுமின்றி,சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுவதற்கு முன்பே,இதுபோன்ற நிகழ்ச்சிகளில் முடிவாகும் திருமணங்கள்..என்று “அதுவொரு வசந்தகாலமாக இருந்தது.” என்று, பெரும்பாலும் ஏக்கப் பெருமூச்சுவிடும் காலமாக இன்று மாறிவிட்டது.

மனதை ஆயாசப்படுத்தும் இந்த மாற்றம் எங்கிருந்து,ஏன் துவங்கியது.? என்று பலருக்கு சிந்திக்க நேரமில்லை.நாம் அவ்வாறு சிந்திக்காததற்கு அன்றாட வேலை,அதற்கான உழைப்பு,பெறுகின்ற சம்பளம்,பற்றாக்குறையாகும் பொருளாதார நெருக்கடி..என்று நியாயமான பல காரணங்களுண்டு.

ஆனாலும்,வசதியும் வாய்ப்பும் இருக்கும் அண்டைஅயலார்கள் ஏதேனும் ஒரு பண்டிகை அல்லது திருவிழாவைக் கொண்டாடும்போது,நம்மால் சும்மா இருக்கமுடிவதில்லை.பக்கத்தில் ஆர்ப்பாட்டமும் கொண்டாட்டமுமாக இருக்கும்போது,நம் வீடு மட்டும் அமைதியாக இருந்தால், “பாவம்.. இவர்களுக்கு வசதியில்லை போலிருக்கிறது..”என்று,மற்றவர்கள் நினைத்துக் கொள்வார்கள் என்ற மனோபாவம் நமக்குள் இயல்பாகப் படிந்துவிடுகிறது.அது கௌரவக் குறைச்சலான விஷயமாகவும் பார்க்கப் பழகிவிட்டது மனது. இந்தக் கௌரவத்தைக் காப்பாற்றிக் கொள்வதற்கான நடவடிக்கையில் நம்மையும் இணைத்துக் கொள்ளவேண்டியதாக இருக்கிறது. குழந்தைகள் பாவம் அவர்களுக்காக.., மாமனார் மாமியார் பாவம் அவர்களுக்காக.., திடுமென்று உறவினர்கள் வந்துவிட்டார்களே அவர்களுக்காக.., என்று காரணங்களையும் நாமே உற்பத்தி செய்து கௌ;கிறோம் அல்லது கற்பித்துக் கொள்கிறோம்.அதன் விளைவுகள் எங்கே கொண்டுபோய் விடுகிறது..? ஒரு சராசரி கணவன் அல்லது மனைவியின் குரலில், “எங்கே நிம்மதி..”என்ற தலைப்பிட்ட அவரது கவிதையொன்று,

“இப்போதுதான்
ஹாப்பி பர்த்டே
கொண்டாடி முடித்தோம்...
ஸ்ரீ ராமனுக்கு .

இரண்டாயிரம் செலவானது .
அவன் அலங்காரத்துக்கு
சாப்பாட்டுக்கு
இதர செலவுகளுக்கு ...

இன்னும் சில வீடுகளில்
தன் பிறந்தநாளை
இன்னும் விமர்சையாக
கொண்டாடுகிறானாம் அவன்.
நானும் முயற்சிக்கிறேன் ராமா
என்று வருத்ததோடு
சொல்லி அனுப்பினேன் .

இப்படித்தான்
கிருஷ்ணனுக்கும், விஷ்ணுவுக்கும்
சிவனுக்கும் கூட .

கணேசன் பிறந்தநாளுக்கு
சேலரி அட்வான்ஸ்
வாங்கினால்தான் முடிகிறது.. ----–என்பது வரை தனது இயலாமையையும், அங்கலாய்ப்பையும் எடுத்துச் சொல்லும் இந்தக்கவிதை, இதுபோன்ற சிக்கல்கள் இல்லாமல் தாங்கள் இருந்த காலத்தையும் நினைத்துப் பார்த்துக் கொள்வதாக அடுத்த பத்தி துவங்குகிறது.

ஆனால்
ஊரில் இருந்தபோது
நாங்கள் கும்பிட்ட
காட்டேரி முனிஸ்வரன்
கறிகுழம்பு வைத்தாலும்
தின்பார்கள் .
களி வைத்தாலும்
தின்பார்கள் .

மேக் அப்
செய்து கொள்ளவும்
மாட்டார்கள் .

பிறந்த நாள் தெரியாது .
பந்தாவும் கிடையாது.
விரதம் வேண்டாம் .
வேலையையையும் பார்க்கலாம் .

சிறிய கடவுள்கள்தான் .
ஆனா பெரிய மனுஷனுங்க.!”---- என்று முடிக்கும்போதுதான்,கவிதை தீவிர அரசியலைப் பிரதிபலிக்கிறது.

நாட்டார் தெய்வங்கள் என்றும்,சிறுதெய்வங்கள் என்றும் நாம் இந்த மண்ணின் பாரம்பர்யத்துடன் கொண்டாடி வந்த திருவிழாக்கள், நாடு தழுவிய அளவில் ஏற்படும் அரசியல் மாற்றங்களினால் எவ்வாறெல்லாம் மாறிப்போய்விட்டது என்ற சிந்தனைக்குள் நம்மை செலுத்துகிறது.

சிறுதெய்வங்களை வணங்குபவர்களாக இருந்த நம் மண் சார்ந்த மக்கள்,திருவிழா என்பது மக்களின் நேரத்தையும்; பொருளாதாரத்தையும் சிதைப்பதாக வடிவமைத்துக் கொள்ளவேயில்லை.ஆனால்,அதற்குப்பின் ஏற்பட்ட பெருந்தெய்வ வழிபாடுகள்,வழிபாட்டிற்கான முறைகள் என்று வகுத்தளிக்கப்பட்டதை மீறமுடியாமல்,சொந்த வாழ்க்கையில் அவதிப் பட்டுவரும் நிலையைக் கச்சிதமாக எடுத்துச் சொல்கிறது“எங்கே நிம்மதி..!” எனும் இந்தக் கவிதை.அதே நேரம் நமது சிறுதெய்வங்களையெல்லாம் காவல் தெய்வங்களாக கோவிலுக்கு வெளியே அமரவைத்துவிட்டு,பெருந்தெய்வங்கள் கருவறைக்குள் குடியேறி,ஆட்சி செய்கின்றதைப் பார்க்கும்போது,இது வளர்ச்சியா,சிதைவா..? என்றும் வாசகர்களே சிந்திக்கட்டும்.!

தோழர் ராம்வசந்தின் கவிதைகளில் சில கடந்தகால நிகழ்கால ஒப்பீடுகளின் மூலம்,மாற்றங்களை எடுத்துக் காட்டுவதாக இருக்கிறது.இந்த மாற்றங்கள் குறித்து எல்லோரும் அறிந்திருந்தாலும்,அதனை கவிதையாக்கித் தரும் முயற்சி அழகாகக் கைவந்திருக்கிறது.தனது கருத்துக்களை சொல்வதற்காக, வார்த்தைகளையும்,களத்தையும் வித்தியாசமான கோணத்தில் தேர்ந்தெடுப்பதில் அவர் செலுத்தும் கவனமே,அவரது சிறப்புக்குரிய காரணமாக இருக்கிறது. மேலும்,அவருடைய வாழ்க்கைக்கு மிகவும் நெருக்கமான அனுபவத்தை, படைப்புகளாக அவர் தரும்போது,அதில் வெளிப்படும் அலங்காரமற்ற உண்மை,கவிதையை மேலும் அழகாக்கிவிடுகிறது.

அரசாண்ட காலம் எனும் தலைப்பில்,ஒரு குடும்பச்சூழ்நிலையை வைத்து, தலைமுறைகள் கடக்கின்ற பாதையை,அவர் இவ்வாறு துவங்குகிறார்.

“தன் அப்பாவின்
சிகரெட்டில் ஒன்றையுருவி
இதான் கடைசி தடவை
எனக் கொடுக்கும் சித்தி மகள்

ஆத்துல உம்ம தேவதை
துணி துவைச்சிட்டு இருக்கு
தகவல் தரும் அண்ணி

மாப்ள நீ சிங்கமடா
பயந்த என்னைத் தாங்கி
நீச்சல் பழக்கிய தாய்மாமன்

அவிங்கள வெட்டனும்
பன்னெண்டு போடறா அப்பு
தாயக் கூட்டாளி பெரியம்மா

முள் எடுத்த மீன்களை
மகன் தட்டிலிருந்து எனக்கு
பரிமாற்றம் செய்யும் அத்தை

அண்ணன் மவன் என்னைய வச்சு
டபுள்ஸ் அடிக்கிறான்லே
சொல்லி வியக்கும் சித்தப்பா – என்பது வரை குடும்ப உறுப்பினர்களின் பாசத்தையும்,தன்னலம் கருதாத அன்பின் நெகிழ்ச்சியான தருணங்களையும் வெளிப்படுத்திவிட்டு,

இப்படி யாருமில்லாதொரு
ராஜ்ஜியத்தில்
தன்னைத்தானே
செல்பி எடுத்துக்கொண்டிருக்கிறான்
என் மகன் .—என்று முடிக்கும்போது,காலச் சூழ்நிலைகளுக்குட்பட்டு,தொழில் நிமித்தமாக இடம்மாறும் பெரும்பாலான தனிக்குடும்பங்கள் சந்தித்து வரும் இன்றைய யதார்த்தம் முகத்திலறைவதோடு,கடந்த காலத்தின் நெகிழ்ச்சி மிக்க தருணங்களின் மீதான ஏக்கத்தையும் வாசகன் மனதிற்குள் கடத்திவிடுவதில் இந்தக் கவிதை வெற்றி பெற்றுவிடுகிறது.

இப்படிக்கு உங்கள் சூத்திரன்…என்ற தலைப்பிட்ட கவிதையொன்று,தாய்மதம் திரும்புதல் என்று சமீபத்தில் நாடுதழுவிய அளவில் நடைபெற்ற நிகழ்ச்சிகளையும் கவனப்படுத்துகிறது.தாழ்த்தப்பட்டவர்களை என்ன பெயரிட்டு அழைத்தாலும்,அவனும் நம்மைப்போல சராசரி மனிதன் என்று அங்கீகரிக்கப்படும் வரை அவன் எந்தப் பெயரில்தான் இருந்தால் என்ன..? என்ற கேள்வியையும் இக்கவிதை முன்வைக்கிறது.

தங்கள் மதம்தான் சகலவிதத்திலும் உயர்ந்தது என்று நம்புபவர்களின் நம்பிக்கைகளை நாம் குறை சொல்லப் போவதில்லை.ஆனால்,தங்கள் மதத்திற்கு மீண்டும் அழைத்து வரப்பட்டு,ஒரு பொது அடையாளத்தை அவன்மீது திணித்தால் மட்டும்,அதற்கு முந்தைய அவனது சமூகவாழ்வு மேம்பட்டுவிடுமா..?.

“என் பெயரை
ஆதிதிராவிடர் என்று
மரியாதையாய்
உச்சரிக்கிறீர்கள்
எழுதும்போது
படிக்கும்போது.

இப்போது
இந்து என்ற
கீரிடத்தையும்
சூட்டுகிறீர்கள்.

சரி ...
நீங்கள் கொடுக்கும்
ராஜேந்திரனின் வாளோ
கோட்சேவின் துப்பாக்கியோ
ஏதோ ஒன்றை எடுத்து
உங்கள் எதிரியை
நான் முடித்தவுடன்

என்னை
உங்கள் தலைவனாக
ஏற்றுக் கொள்வீர்களா?
....
அல்லது
உங்கள் எதிரி
என்னை முடித்துவிட்டால்
உங்கள் சுடுகாட்டில்
என்னை புதைப்பீர்களா? --- என்ற கேள்வி எழுப்புகிறது இக்கவிதை.

மற்றைய சாதிகள் மதங்கள் அவர்களை அங்கீகரிக்க மறுப்பதில்,இவன் தங்கள் மதமில்லை,சாதியில்லை என்ற காரணம் இருக்கிறது. ஆனால்,சொந்த மதத்தில் இணைக்கப்பட்டவனும்,அவர்களாலேயே பலவிதத்திலும் புறக்கணிக்கப் படுகிறான் எனில்,எதற்காக அவன் மதம் மாறவேண்டும்.? என்னையும் தங்கள் பொது அடையாளத்திற்குள் கொண்டுவருவது யாருடைய நலனைப் பாதுகாக்கும் முயற்சி..? என்று கேட்கும் பாதிக்கப்பட்ட மனிதனின் குரலாக நின்று பேசுகிறது இந்தக்கவிதை. காலத்தின் கண்ணாடிபோல, சமீபகாலங்களின் நிகழ்ச்சிகளையும் அதன் விளைவுகளையும் தனக்குள் இணைத்துக் கொண்டு,நம்மைப் பார்த்து சுயபரிசோதனை செய்துகொள்ளச் சொல்லி நிர்ப்பந்திக்கவும் செய்கிறது.

இந்தியாவில் 100 ஸ்மார்ட் சிட்டிகள் அமைக்க ரூ.60 லட்சம் கோடி செலவிடப் படும் என்று இந்தியஅரசு கடந்த ஆண்டு அறிவித்துள்ள நிலையில், உத்தரப் பிரதேசம் ராம்பூர் பகுதியில், அரசால் கையகப்படுத்தப்படவுள்ள நிலங்களில் உள்ள சொந்த வீடுகளில் பலஆண்டுகளாக வசிக்கும் 800 குடும்பங்களைச் சேர்ந்த இந்துக்கள், தங்கள் வீடுகளைக் காப்பாற்றிக் கொள்ளும் பொருட்டு நேற்று- 15.04.2015-இஸ்லாமியர்களாக மாறியுள்ளனர். அப்படியானால் மதம் என்பது மக்களிடையே எந்த மாதிரிப் பாத்திரத்தை வகிக்கிறது.? என்ற கேள்வியையும் இன்றைய நிலையோடு ஒப்பிட்டுப் பார்க்கத் தூண்டுகிறது இந்தக்கவிதை.

சமூகம் சார்ந்த வெளிகளிலேயே பெரும்பாலும் பயணப்படும் தோழர் ராம்வசந்தின் கவிதைகள் எப்போதும் ஒரு சிறுகதைக்கேயுரிய அடக்கத்துடன் வெளிப்படுவது வெகுசிறப்பு.காதல்கவிதைகள்கூட இந்த வரைமுறைக்குத் தப்பவில்லை. என்னை சமீபத்தில் மிகவும் பாதித்த கவிதையாக நான் பார்ப்பது “அப்பா..” எனத்தொடங்கும் ஒரு கவிதை.வாசகனை பலவிதமாகவும் சிந்திக்க வைக்கிறது.

கல்விக்கட்டணம் என்ற பெயரில் பள்ளிக்குழந்தைகளும்,அவர்களின் பெற்றோர்களும் படும்பாடு வருடம்தோறும் அதிகரித்துக் கொண்டே வருகிறது.தனியார் பள்ளிகள் தாங்கள் அளிக்கும் வசதிகளாக வெளியிடும் செய்திகள் மற்றும் விளம்பரங்களைக் கண்டு,“நம் பிள்ளைகளுக்கு வளமான எதிர்காலம் கிடைக்குமே..”என்று பெற்றோரின் நம்பிக்கையை நாளும் வளர்த்தெடுக்கின்றன. இதனைப் பேராசை என்று எப்படி சொல்வது.? தங்கள் எதிர்கால சந்ததியின் மீதான அக்கறை என்றுதானே கொள்ளமுடியும்.

இந்த அக்கறையை தனியார் கல்விநிறுவனங்கள் தங்கள் விருப்பப்படி பணமாக்கும்போது,அதற்கு பெற்றோர்கள் பலியாகின்றனர். கட்டணத் தொகையை கட்டுமளவிற்கு வசதியிருப்பவர்கள் இப்போதைக்கு தப்பித்து கொள்கின்றனர். இனி எதிர்காலம் எப்படியிருக்குமோ..? தெரியாது.

குறிப்பிட்ட ஒவ்வொரு கி.மீ.பரப்பளவிற்;குள்ளும் ஒரு மழலையர் பள்ளி,துவக்கப் பள்ளி,உயர்நிலைப் பள்ளி, மேல்நிலைப் பள்ளி..என அரசுப் பள்ளிகள் இருக்க வேண்டும்.இலவசக்கல்வி,கட்டாயக்கல்வி என்பதுள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் அங்கு நிறைவேற்றப்படவேண்டும் என்பது மத்திய,மாநில அரசுகளின் கல்விக் கொள்கையாக அரசமைப்புச் சட்டத்தில் இப்போது வரை இருக்கத்தான் செய்கிறது.

ஆனால்,இன்றைய யதார்த்தம் என்ன.? அரசின் எந்த விதிமுறைகளும் உரியமுறையில் நிறைவேற்றப்படாமல், விதிகள் லஞ்சத்திற்கேற்ப தளர்த்தப்பட்டு,தனியார் கல்விநிறுவனங்கள் துவங்குதற்கு அனுமதிகள் கிடைக்கின்றன. தான்வசிக்கும் பகுதியில் அரசுப்பள்ளி இல்லையென்றால், அங்கிருக்கும் தனியார் பள்ளிகள்தானே ஒரே கதி..? இது திட்டமிட்டு உருவாக்கப்படும் பொதுநெருக்கடி என்பதை நாம்தான் உணர்ந்து கொள்ள வேண்டும்.

பிள்ளையை,முதன்முதலாகப் பள்ளியில் சேர்க்கும்போது,வீடு வசதி,நில புலன்களோடு இருந்த குடும்பம்,பிள்ளை படித்துமுடித்து வெளியேறும்போது, வாடகைவீட்டில் வசிக்கும் அவலங்களும் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. அப்படியாயினும்,கல்லூரியை விட்டு வெளியேறும் பிள்ளைக்கு வேலைக்கான உத்தரவாதம் நூறு சதவீதம் இருக்கிறதா..? என்றால் அதுவும் இல்லை.

ஆயிரம் கோடி,லட்சம் கோடி..எனத் திட்டங்களை அறிவித்து நிறைவேற்றும் தகுதியுள்ள அரசுகளின் ஆட்சிகள் நடைபெறும்,இன்றைய இந்தச் சூழ்நிலையில், ஒரு குறிப்பிட்ட பகுதியில் வசிக்கவேண்டிய நிர்ப்பந்தமுள்ள ஒரு சராசரியான மாத சம்பளக்காரன்,எத்தனையோ சிரமங்களுக்கிடையில் தன் குழந்தையை எப்படிப் படிக்க வைக்கிறான்.?

இதோ இப்படித்தான்..என்று தோழர் ராம்வசந்த் சொல்லுகின்ற கவிதை,

“அப்பா.!
இன்னிக்கி
பீஸ் கட்ட கடைசி நாள்
என பிள்ளை நினைவூட்ட ..
அவன் வகுப்புக்கு வெளியே
நிற்பதும் நிற்காததும்
இன்று மனைவியின்
கையில்தான் இருக்கிறது .

போன முறை
அவள் காதில் இருந்தது..! --- விவரணைகள் தேவைப்படாத இந்தக்கவிதை, கவித்துவம் மிக்கது.இதனை நாம் வாழும் காலத்தின் யதார்த்தத்தை அப்பட்டமாகப் பிரதிபலிக்கும் பொக்கிஷமாகவே நான் கொண்டாடுகிறேன்..! யுகங்கள் இவர் படைப்புகளைப் பின்தொடரட்டும்..! வாழ்த்துக்கள் தோழரே..!

----- --நிறைவு------------

இக்கட்டுரை எழுத வாய்ப்பளித்த தோழர் கவித்தா சபாபதிக்கு எனது மனம்கனிந்த வாழ்த்துக்களும்,நன்றிகளும்.!

அன்புடன்
பொள்ளாச்சி அபி.

எழுதியவர் : பொள்ளாச்சி அபி B +ve (16-Apr-15, 9:30 pm)
பார்வை : 935

மேலே