பழைய பறவை புது பயணம்
நள்ளிரவில்
வாங்கினோம்
சுதந்திரம்.
விடிந்தது
அமெரிக்காவுக்கு
கொண்டுப்போய்விட்டான்
ஆயிரம் அறிவாளிகளை
இங்கிருந்து..!
விழியில் விழுந்து
இதயம் நுழைந்து
ப்ளாக் செய்வதில்
முடிந்தது காதல்..!
நல்ல புத்தகம்
சிறந்த நண்பன்.
சிறந்த நண்பன்
ஒரு நூலகம்..!
கடலும் வானும்
நீலநிறமென தெரிந்ததே.
பெருவெளியை
செல்பேசியாக்கி
கடல் எடுக்கும்
செல்ஃபியே
வானம்.
சொர்க்கத்தில்
நிச்சயிக்கப்பட்டது
திருமணம்.
சாதி மதமெனும்
நரகத்தின் வழி சென்று..!
ஆனந்த சுதந்திரம்
அடைந்துவிட்டோம்.
வெளிநாட்டுக்காரர்களுக்காக
வேலை பார்க்கவே..!
வெண் பா என்பது
சாயங்களை
வெளுக்கும்
பாட்டாக்குக..!
செய்யுள் என்பது
உள்ளுக்குள்
ஏதோ செய்வதாக்குக..!
உம்மைத்தொகை
உம் மைக்கொண்டு
தொகுப்பதாகட்டும்..!
பொய்களை
நிர்வாணமாக்கிவிட்டு
இதோ அணி என்க.
நேர் நேர் சொல்வது
தேங்காய் மாங்காய்களின்
மண்டை உடைக்க...!
யாப்பு என்பது
யாப் பு என்று
அச்சங்களை
ஊதச் செய்வதாகட்டும்.!
மிகவேக காலமாற்றம்
இதையும் பழசாக்க
ஒரு தலைமுறை காத்திருக்க
தேவையில்லை.
ஒருவாரமே
அதிகபட்சம்..!
--கனா காண்பவன்