மனிதக் குரங்கு
![](https://eluthu.com/images/loading.gif)
சந்தணம் குழையும் சாந்தின் நிறத்தில்
பிறந்தாய் என்று சொன்னாள் அம்மா
காக்கையும் தம்மகன் பொன்மகன் என்னும்
பழஞ்சொல் முழுதாய் அறியா வயதில்
அகவை ஐந்து முடிந்த பருவம்
பள்ளியின் படியை மிதித்த சிறுவன்
ஆண்டொரு பத்து முடித்து மீண்டும்
காதலின் பள்ளி வழுக்கி வீழ்ந்தான்
கண்டது கற்கப் பண்டிதன் ஆவான்
எனப்பொருட் கூறுவர் பார்ப்புகழ் நூலோர்
காதலுங் கற்கப் பெருங்கவி ஆவாய்
என்றவன் காட்டினான் அச்சிறு வயதில்
எது எதிர்பார்ப்பினும் தோல்வியில் முடியும்
வரமும் அவனின் அழியாச் சொத்து
அகம்முதல் முளைத்து துளிர் விட்டெழுந்த
காதலும் அதற்கு விதிவிலக் கல்ல
இரண்டாம் தடவை பெருங்கிளை கடந்து
எட்டிப் பறித்தான் எட்டாக் கனியை
விழியில் தொடங்கி முத்தம் முடித்த
அவளுக் கிவனோ மூன்றில் ஒன்று
வேலைக் கென்று ஏறும் படிகள்
கடற்கரை மணலில் சாந்திலா சிற்பம்
திரைகடல் ஓட பாய்மரம் வந்தும்
நாட்டைத் தாண்டா அறிவிலா அற்பம்
தோல்வி அழுத்தம் கேலி ஏமாற்றம்
என்பவை கிடக்கும் மலைவழி தாவி
தனக்கென நிலையாய் ஓரிடம் தேடும்
உண்மையில் அவனோர் மனிதக் குரங்கு