ரத்த சரித்திரம்

தெருக்கோடியில் வளர கூட
தெளிவு முளைக்காத என்னை
உன் தொப்புள் கொடியில்
மலர வைத்தாயே
மகிழ்கிறேன் தாயே?
அதனால்தான் சொல்கிறேன்
நீ ஆதாரம்,நான் சேதாரம்
.........................................,
ஆயிரம் தான் இருந்தாலும் அம்மா
உனக்கு முன்னால் நான்
ஒன்றுமில்லை வெறும் சும்மா

கதையாய் சொல்ல நீ
முத்த காவியமல்ல
சதையாய் உள்ள
உயிர் சாசனம்
சிறு விதையையும் சீராக்கி
தானியமாய் தருவிப்பவள்
நீ வளர்க்கும் வயல்வெளி
நான் உலரும் பனித்துளி

நீ மலை முகடு
நான் இலைச் சுவடு
காலமெல்லாம் உயிரூட்டி
நீ வேராக இருக்கின்றாய்
ஆனால் நான்
உன் காலடியில்
ஒருநொடி சருகாக கிடக்க கூட
சம்மதிப்பதில்லை

ஆறாத காயத்தையும்,
அழ வைக்கும் கவலையையும்
பிறப்பிலிருந்தே நான் உனக்கு
பிரதிபலன் ஆக்கிவிட்டேன்

கைமாறு எதிர்பாரா
கருணை ஆனாய்
காலத்தின் முன் நிற்க
பொருள் நீயானாய்
நீ புழக்கத்தில் இருக்கும்
நாணயம்
நான் பழக்கத்தில் வெறுக்கும்
செல்லா காசு

ஆயினும் என்னை
பொற்காசு புதையலாய் புகழ்கிறாய்
உயிரூட்டி,உயிரூட்டி மகிழ்கிறாய்

அதனால்தான் சொல்கிறேன்
நீ ஆதாரம்,நான் சேதாரம்
ஆயிரம் தான் இருந்தாலும் அம்மா
உனக்கு முன்னால் நான்
ஒன்றுமில்லை வெறும் சும்மா

அம்மா நான்
உனக்கு வலிகள் சேர்த்த
சுத்த தரித்திரம்
அம்மா நீ
எனக்கு வரமாய் வாய்த்த
ரத்த சரித்திரம்.


ரோஷான் ஏ.ஜிப்ரி-இலங்கை.

எழுதியவர் : ரோஷான் ஏ.ஜிப்ரி-இலங்கை. (18-Apr-15, 10:00 pm)
பார்வை : 151

மேலே