மரங்களும் மரங்களும் - கே-எஸ்-கலை

வருவோரை வரவேற்க
வாசலில் “வாழை மரங்கள்”
நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன !

"தென்னங்
குருத்துகளும் பாளைகளும்"
மங்கள அலங்கார நிமித்தம்
வெட்டி தோரணமாய் கட்டி
தொங்க விடப்பட்டிருந்தன !

ஆயிரக்கணக்கில்
“நெகிழிக் கதிரைகளால்”
நிரப்பியிருந்த மண்டபத்தின்
கிழக்குப் பக்கமாய்
பிரமாண்டமாய் பிரமாதமாய்
மேடைக் கட்டியிருந்தார்கள் !

மேடையின் சரி மத்தியில்
“தேக்கு மரத்தால்” செதுக்கப்பட்ட
ஆடம்பர மரக்கதிரையொன்று
அமர்த்தப்பட்டிருந்தது !

அமர்ந்திருத்த அனைவருக்கும்
“செயற்கையாய் சுவையூட்டிய
தோடம் பழச்சாறு”
வரவேற்பு பானமாய்
வழங்கப்பட்டுக் கொண்டிருந்தது !

குறிப்பிட்ட நேரத்தின்
ஒரு மணித்தியால
தாமதத்தின் பின்னர்
“CLA-Class mercedes benz மகிழூந்து”
மண்டப வாயிலில் வந்து நின்றது !

பலத்த கரகோஷம்
அரங்கத்தை
அதிரவைத்துக் கொண்டிருந்தது...
“செங்கம்பளம்” விரித்து
அழைத்துவரப்பட்டு
தேக்கு கதிரையில் அமர்த்தப்பட்டார்
தேசிய கவிஞர் !

மரம்....
மனிதனுக்கு கிடைத்த
வரம்....
கவிப்பாடத் தொடங்கினார்...

கைத்தட்டலும்
விசில் சத்தமும்
வானைப் பிளந்துக் கொண்டிருந்தது !

யுகத்தின் மேம்பாட்டை
வரிவரியாய் விதைத்து வைத்திருந்தது
அந்த “யூக்கலிப்டஸ் மரத்தின்”
மீதியாயிருந்த “புதிய வெளியீடு”

“ஒருவர் ஒரு
புத்தகம் வாங்கினாலே
உலகத்தின் விடியல்
உறுதியாக்கப்படும்”
இறுதியாய் சொல்லிவிட்டு
மேடையையில் முழங்கினார்
வெளியீட்டாளர் !

உசுபேற்றப்பட்ட அனைவரும்
ஓடி ஓடி வாங்கினார்கள்....
புத்தகத்தின் விலை
வெறும் 500 மட்டுமே....!

இரண்டாம் பதிப்பு
அடுத்த மாதமே....
பொறுத்துக் கொள்ளுங்கள்
உறுதியாக சொன்னார்
விழா ஏற்பாட்டாளர் !

ஆண்டின் சிறந்த வெளியீடு...
விருது வாங்கியது புத்தகம் !
அரசாங்கத்தால்
விருது விருந்தெல்லாம் வழங்கி
கௌரவிக்கப் பட்டார்
தேசிய கவிஞர் !

அவுஸ்திரேலிய தமிழ்சங்கம்
அழைத்தது அவரை....
தண்ணீரின் தேவைப் போற்றி
தரணியெங்கும் விளங்குமாறு
கவிபாடச் சொல்லி
டாலர்களை கொட்டியது !

பாடினார்...அசத்தினார்....
விழா முடிந்தது
ஓய்வுக்கு ஒருவாரம்
எடுத்துக் கொண்டு
புதிதாய் வாங்கிய
"அப்பிள் தோட்டத்தைப்"
பார்வையிடப் போய்விட்டார்....

ஊரில்
அடுத்த விழாவுக்கு
வாழையும் தென்னையும்
வதம் செய்யப்பட்டுக் கொண்டிருந்தன !
--------------------------------------
மரங்களும் "மரங்களும்"

எழுதியவர் : கே.எஸ்.கலை (24-Apr-15, 9:57 am)
பார்வை : 158

மேலே