விடுமுறைக் கொண்டாட்டம் - ஒரு பக்க நகைச்சுவைக் கதை

................................................................................................................................................................................................
குழந்தைகளுக்கு கோடை விடுமுறை ஆரம்பித்து விட்டது. மகனின் பள்ளியில் விடுமுறைக்கு முன் ஒரு சேர்ந்திசைவு விழா ஏற்பாடாகியிருந்தது. விழாவை குழந்தைகளே குழந்தைகளுக்காக ஒருங்கிணைத்து நடத்துகிறார்கள் என்றும் பெற்றோர்கள் ஒன்றும் மெனக்கெட வேண்டாம், விழாவுக்கு ஹாயாக வந்தால் போதும் என்றும் அறிவித்திருந்தனர்.

மார்ச் இறுதி வாரம்.

விழாவில் என் மகனும் கலந்து கொண்டிருந்தான். இப்போதுதான் பேசிப் பழகும் அவன் என்னத்தை ரைம்ஸ் சொல்லப் போகிறான் என்ற ஆச்சரியம் இருந்தாலும் அவனுக்கு ஆடை அலங்காரம் முடித்து நாங்களும் பொழுதோடு பள்ளிக்குச் சென்று விட்டோம். விழா மேடைக்கு அந்தப் பக்கம் போய் விட்டான் மகன்.

விழா மேடையில் பத்து வயதுக்குட்பட்ட ஒரு ஆணும் ஒரு பெண்ணும் கழுத்தில் விசில் மாலை சகிதம் கையில் பழைய காலண்டரை சுருட்டி கோல் மாதிரி வைத்துக் கொண்டு பரபரப்பாக அங்குமிங்கும் அலைந்து அதிகாரம் பண்ணிக் கொண்டிருந்தனர். அவர்கள் இருவரும்தான் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கப் போகும் பசங்களாம். இருவரும் ஐந்தாம் வகுப்புப் போகிறவர்கள்.

சின்னக் குழந்தைகளுக்கு பெரிய குழந்தைகள் பயிற்சி கொடுத்திருப்பதாகவும் ஆசிரியர்கள் பிள்ளைகளா உங்கள் சமர்த்து என்று விலகி வேடிக்கை பார்க்கப் போவதாகவும் ஆகவே விழாவில் ஏதேனும் அசௌகரியம் ஏற்பட்டால் பெற்றோர்கள் பெரிது படுத்தாமல் பெருந்தன்மையாக எடுத்துக் கொள்ளும்படியும் எங்களுக்கு ஏற்கெனவே கோரிக்கை விடப்பட்டது.

விழா தமிழ்த்தாய் வாழ்த்தோடு ஆரம்பித்தது.

அடுத்து வரவேற்புரை.

ந-ல்-வ-ர-வு என்று ஒவ்வொரு எழுத்து எழுதி குச்சியில் செருகிய அட்டையை ஒவ்வொரு குழந்தை பிடித்துக் கொண்டு சரியாக வரிசையில் நின்றால் வரவேற்புரை முடிந்தது...!

அட்டைகளை தூக்கி வந்தது மூன்று - நான்கு வயதுக் குழந்தைகள் !

ஒரு அரை நிமிடம் ஐந்து குழந்தைகள் வரிசையில் நின்றால்தானே? இதில் சண்டை வேறு... !

நாங்கள் பார்த்துக் கொண்டிருக்கும் போதே "ந" வின் தலையில் நங்கென்று அடித்தது "ல்"..!

தாறுமாறாக மாறி மாறி நின்றதில் பார்வையாளர்கள் வாசித்தது:

வுரவல்ந, வுநரவல், வுல்நவர, வல்நரவு, நவவுரல்.....

இதற்கு மேல் சீரியசாக பார்த்துக் கொண்டிருந்த எங்களால் சிரிப்பை அடக்க முடியவில்லை....! ! ! ! ! !

பெரிய குழந்தைகள் இருவரும் “ எழுத்துக்களை " அதட்டி உருட்டி வரிசையில் நிற்க வைத்தனர்.

கடைசியில் "வு" மேடையை விட்டுக் கீழே இறங்கிப் போயே போய் விட்டதால் நல்வர- என்பதோடு அந்த நிகழ்ச்சி இனிதே முடிந்தது.... !

அடுத்தாற் போல ரைம்ஸ்.. இதுவும் பிரீ கே ஜி தான் !

“துங்கிள் துங்கிள் லித்தி ஸ்தார்...
அவ்வை வொந்த வாத் யூவார்..
அப்ப பப்ப பப பப பை
வைத்த வைத்த வயித் தத்தை ! ! ”

பலத்த கைத்தட்டல்களுடன் மூன்று முறை “ஒன்ஸ் மோர்” வாங்கியது நிகழ்ச்சி. என் மகனின் நிகழ்ச்சி ! !

” வனம் காப்போம் ” என்று அடுத்த நிகழ்ச்சி.

பெரிய குழந்தைகள் இருவர் மரம் போல் வேடமணிந்து நின்றார்கள். விலங்குகள் போல் காஸ்ட்யூம் போட வேண்டிய சின்னக் குழந்தைகள் தங்கள் விருப்பப்படி வந்ததால் யானைத்தலை கொண்ட கிளி, ரெக்கை முளைத்த புலி, ஜட்டி மட்டும் போட்ட யானை, புலித்தலையும் யானை உடம்புமாய் வந்த புது விலங்கு என்று களை கட்டியது மேடை. அத்தனையும் சேர்ந்து பாய்ந்து பாய்ந்து அட்டைக் கோடாலிகளை பிய்த்துப் போட வேண்டும். அதுதான் நிகழ்ச்சி. எதிர்பாராத விதமாக கோடாலிகளோடு மேடை அலங்காரத்தையும் பிய்த்தன பொடிசுகள்.... ! இதனால் மரங்கள் அவசர அவசரமாக மிருகங்களைப் பிடித்து இழுத்துக் கொண்டு போனது, கண் கொள்ளாக் காட்சி ! ! நிகழ்ச்சி முடிவில் ஆடை கழற்றாமல் புலிகளும் கிளிகளும் அப்படியே தங்கள் பெற்றோர் மடியில் உட்கார்ந்து கொண்டன.

இப்போது வந்தது ஒன்றாம், இரண்டாம் வகுப்புக் குழந்தைகள்.

வீர பாண்டிய கட்டபொம்மன் நாடகம்.

பாதி வரை நன்றாகப் போனது..

கட்டபொம்மனாக மீசையெல்லாம் வரைந்து வீரா வேசத்தோடு வாள் எடுத்து வந்த குழந்தை கூட்டத்தைப் பார்த்ததும் பயந்து விட்டது. குழந்தைக்கு கிஸ்தி என்ற வார்த்தை மறந்து விட்டது !

“வா..னம் பொழிகீறது... பூமி விளைகிர்றது...உனக்கேன் கொடுப்பது கிஸ்?”

பின் பக்கமிருந்து உஸ் புஸ் என்று வசனம் சொல்லித் தந்தார்கள்; குழந்தை கவனிக்காமல் அதையே திருப்பி திருப்பிச் சொன்னது..

ஆசிரியர்கள், வந்திருந்த பெற்றோர்கள் அனைவரும் முப்பத்தைந்து வயதுக்குட்பட்டவர்கள். அப்படியே அலையடித்தது சிரிப்பு..............!

“ இதுதான் பிரசினைன்னா கட்டபொம்மன் அப்பவே தீர்த்திருப்பாரே? ” – கூட்டத்தில் கமெண்ட் வேறு.

கட்டபொம்மன் குழந்தை அழப் போக, ஜான்சன் துரை குழந்தை கைப் பிடித்து சமாதானம் செய்தது. இரண்டும் சுற்றி சுற்றி “ரிங்கா ரிங்கா ரோஸஸ்” பாட ஆரம்பித்தார்கள். அதில் சில பிரிட்டிஷ் வீர்ர்கள், இந்திய சிப்பாய்களும் கலந்து கொண்டு சரித்திரத்தை மாற்றின ! ! ! ! இறுதியில் அந்த இரண்டு பெரிய குழந்தைகள் வந்து ஜான்சன் துரை உட்பட எல்லோரையும் தெர்மோகோல் சிறையில் தள்ளின. ! ! ! ! !

பெரிய பிள்ளைகளின் “பழமுதிர்ச் சோலையிலே-தோழி, பார்த்தவன் வந்தானடி” பாட்டுக்கு நடனம்;

“ வள்ளிக் குறமாது பள்ளி வரும் போது சொன்ன கதை தானடி; நானும் சொல்லப் புகுந்தேனடி - தோழி.... ” என்ற வரியில் வருகிற "பள்ளி" என்ற வார்த்தைக்கு புத்தகப் பையை தூக்கிச் செல்வது போல் பள்ளிக்கூடத்தை அபிநயம் பிடித்துக் காட்டியது இன்னொரு வேடிக்கை....! படிக்கிற குழந்தைகள் மட்டுமே செய்ய முடிந்த வேடிக்கை....! இதுவும் மூன்று தரம் “ஒன்ஸ் மோர்” போனது.

தேசிய கீதத்தோடு விழா நிறைவடைந்தது. எல்லாக் குழந்தைகளுக்கும் பலூன், மிட்டாய் வழங்கப்பட்டது.

விழா நேர்த்தியாக நடந்திருந்தால் சிரித்து சிரித்து எங்களுக்கு வயிற்று வலி வந்திருக்காது என்று பேசிக் கொண்டே வீடு சேர்ந்தோம் ! !

...............................................................................................................................................................................................

எழுதியவர் : அருணை ஜெயசீலி (28-Apr-15, 3:13 pm)
பார்வை : 2586

மேலே