அனுபவக் கல்வி
அன்று-
பாட்டி கடையின்
இலந்த வடை வாங்க
காசு தராத அம்மாவின்
மேலிருந்த கோபம் தணிந்தது -
மதிய உணவு வேளையில்
குடிநீரால் வயிறு நிரப்பும்
குடியானவ நண்பனைக் கண்டு !
துவைத்து துவைத்து
போட்டிருந்த இரண்டே
அரைக்கால் சட்டைகள்
பொன்னாடை ஆயின -
பின்புறம் நைந்து போய்
ஓட்டை கண்கள் கொண்ட
முன்வரிசை நண்பனின்
பழந்துணி கால்சட்டை கண்டு !
எனது செருப்பில்லாக்
கால்களில் முள்குத்திய
ரணவலி தெரியவில்லை -
போலியோ கால்களுடன்
என் வகுப்பு நண்பன்
எதிரே வந்த போது !
ஓடு வேய்ந்த
என் செங்கல் வீடு
அரண்மனையானது -
ஆடிமழைக் காற்றில்
பறந்து போன கூரை
வீட்டுத் தோழன்
கொஞ்ச நேரம்
தஞ்சம் புகுந்தபோது !
அனுபவக் கல்வியின்
மாற்றம் உணர்ந்தேன் -
"டாடி ! மாருதி போரடிக்குது;
ஹோண்டா சிட்டி வாங்கலாம்."
எனது பேராண்டி
அவன் அப்பாவிடம்
கூறியதைக் கேட்டபோது !