உழைப்பாளர் தினம்
உதிரம் சிந்த உழைக்கும்
உழைப்பாளி இவர் வாழ்க்கை
உவகை அடைய நீயும் - ஏதும்
உவந்தளித்ததுண்டா?
சேற்றுக்குள் கோவனத்தூடே
சோற்றுக்காய் தேகம் வாடி
சேர்ந்திட்ட குடும்பத்திற்காய்
சோர்ந்திடாமல் உழைக்கின்றான்
தரணிக்கு உணவளிக்கும்
தார்மீக பொறுப்பு தன்னை
தடம்பதித்து சகதிக்குள்
தடுமாறி உழைக்கின்றான்
ஓலைக் குடிசைக்குள்ளே
ஒப்பாரிசெய் பிள்ளைகளை
ஒப்பேற்ற வழியும் தேடி
ஏதுமறியாமல் நிற்கின்றான்
மந்திரிமார் ஊர்வலத்துக்காய்
கட்சிக்கொடிகள் பறப்பதற்காய்
கனவான்கள் செய்திட்ட
உழைப்பாளி மறந்த தினம்!
மே ஒன்று விடுமுறைநாள்
இவனுக்கில்லை அந்நாள்
அந் நாள் கரை சேர்ந்திட்டால்
இரை சேருமா அவன் வயிற்றுக்கு!