பெண் தந்த பெண்

படம் பார்த்து கவிதை சொல்லுங்கள், போட்டிக் கவிதை (அவலங்கள் )
பெண் தந்த பெண்
பாவலர் கருமலைத்தமிழாழன்
அன்பான என்கணவர் அருளை வேண்டி
அன்றாடம் ஒருகோயில் சென்று வந்தார்
பன்னீரில் மணமூட்டிப் பாலை ஊற்றிப்
பழம்கொடுத்துத் தேங்காயும் உடைத்து வந்தார்
பன்மலர்கள் கூடையிலே எடுத்துச் சென்று
பக்தியோடு காலடியில் தூவி வந்தார்
தன்மனத்தை ஒருமுகமாய்க் குவிய வைத்துத்
தனைமறந்து குறைகளைய வணங்கி வந்தார் !
மாங்காடு அம்மனோடு பேசி வந்தார்
மருவத்தூர் சக்தியினைக் கேட்டு வந்தார்
தூங்காத கூடல்மா நகர்மீ னாட்சி
துயர்தீர்க்கும் காஞ்சிநகர் நல்கா மாட்சி
தீங்ககற்றும் காசிநகர் வாழ்விசா லாட்சி
திருவேற்காடு கருமாரி பகவதி அம்மன்
பாங்குடைய சமயபுர மாரி யம்மன்
பாதங்கள் தொட்டுதொட்டே உருகி வந்தார்!
பெண்தெய்வம் இரங்குமென்றே ஊர்ஊ ராகப்
பெயர்சொல்வோர் இடங்களெல்லாம் தொழுது வந்தார்
கண்ணான தெய்வங்கள் என்றே போற்றிக்
கரம்கூப்பிக் கண்ணீரில் கழுவி வந்தார்
எண்ணத்தை ஏற்றன்னை கருணை பொங்க
எழிலான குழந்தையினை எனக்க ளிக்கக்
கண்ணில்தீ பொறிபறக்க நெருப்புச் சொல்லால்
கடித்தென்னைக் குதறிட்டார் பெண்ணாம் என்றே!