தோசைக்கல்லில் நிலா கேட்பவர்கள்
குழந்தைகள்,
தோசைக்கல்லில்
நிலா கேட்பவர்கள் !
==================
பொருட்களையெல்லாம்
களைத்துப் போட்டு
வீட்டை அழகுபடுத்துகிறார்கள்
குழந்தைகள் !
==================
குழந்தைக்கு
ஊட்டுவதற்காக
வேண்டுமென்றே
சோற்றைக்
குழைத்து வடிக்கும்
ஒரு வீட்டில்தான்
பாசமும்
குழைந்து கிடக்கிறது !
==================
குழந்தைகளின்
புன்சிரிப்பில்
கடவுள்
விளையாட்டுக்
காட்டப்படுகிறார் !
==================
குழந்தைகளின்
தொட்டில்
கடவுளின்
தூரி !
==================
குழந்தைகள்
தட்டிலிருந்து
கீழே இறைக்கும் சோறு
கடவுளுக்கான
மண்சோறு !
==================
சமஸ்கிருதம் என்பது
தேவ பாஷை
நம்மைப் பொருத்தவரை !
மழலை என்பது
தேவ பாஷை
கடவுளைப் பொருத்தவரை !
==================
குழந்தைகளின்
தேசத்தில்
நுழைவதற்கான
விசா
நாமும்
குழந்தையாகிவிடுதல் !
==================
குழந்தைகளின்
பழிவாங்கல்
என்பது
மறந்து போகுதல் !
==================
குழந்தைகளால்
மட்டுமே முடியும் .....
கண்ணீரின்
ஈரம் காயும் முன்பே
புன்னகைத்துவிட !
==================
ஓடிவந்து
தடுக்கி விழுந்த
குழந்தை
அழுதுகொண்டே
தப் தப் எனத்
தரையை அடித்ததில்
புதையல் கிடைத்தது
பூமிக்கு !
==================
கடைக்கு வரும்
குழந்தைகள்
கடையையே
எடுத்துக் கொள்கிறார்கள் !
==================
பொம்மைகள்
குழந்தைகளின்
குழந்தைகள் !
==================
கடவுள் நேரில்
வந்தால்
என்ன வரம்
கேட்பாய் என
வினவப்பட்ட
ஒரு குழந்தை
சொல்லியது
ஐஸ்க்ரீம்
கேட்பேனென்று !
==================
அழுது
சாதித்துவிடும்
குழந்தைகளுக்கு
அழுதால்
சாதிக்கலாம்
என்பது
தெரிந்திருப்பதில்லை !
==================
தா தை
தித்தித்தை யை
மிஞ்சிவிடுகிறது
குழந்தைகளின்
ததக்கா பிதக்கா !
==================
பாசாங்காய்
உள்ளங்கைக்குள்
நிலவு திணிக்கப்பட்டதாக
நம்பவைக்கப்பட்ட
ஒரு குழந்தை
உறங்கிக் கொண்டிருந்தது
உள்ளங்கையை
இறுக மூடிக்கொண்டு !