ரயில் நிலைய புத்தக வியாபாரி
அச்சிடப்பட்ட அறிவுகளை எல்லாம் அள்ளி வந்து சேர்ப்பேன்
அறிவுகளை பரப்பிவைத்து அமைதியாய் காத்திருப்பேன்
*******************************************
அறிவுகளை தேடும் மாந்தர்கள் ஆயிரத்தில் ஒன்றுதான் இங்கு
காந்தி, போஸ், காமராஜ் என பலர் குவிந்து கிடந்தாலும்
அம்பானிக்கும், ரஜினிக்கும் தான் மவுசு இங்கு...
*******************************************
தினம் தினம் புத்தக வணிகத்தினை விடவும்
சில்லறை சிரமம் குறைக்க வைத்திருக்கும்
சாக்லேட்டின் வணிகம்தான் அதிகமாகிறது
*******************************************
வாங்கி வந்து பல வயதினைகடந்தும் விற்காமல்,
வாங்கும் போது அட்டை பக்கத்தில் நெஞ்சு நிமிர்த்தி நின்ற போஸ் கூட
இப்போது கூன் விழுந்து கிழவன் ஆகி நிற்கிறான்..
*******************************************
குங்குமம்,குமுதம் இவற்றின் விற்பனைக்கு முன்னால்
சேகுவாராவும் கைகட்டிதான் நிற்கிறான்
*******************************************
JOCKY உள்ளாடைகளுக்கு MRP விலை கொடுப்பவர்களும்
ஜவர்கலால் நேருவுக்கு 10 % DISCOUNT கேட்கிறார்கள்
*************************************** ****
தன் காதலிமுன் " நான் புத்தகப்பித்தன்" எனும் நாடகத்தினை
அரங்கேற்ற மட்டுமே எனது கடை மேடையாகிறது
பல இளைஞர்களுக்கு..
*******************************************
வயது முதிர் கன்னியின் பெண் பார்த்தல் நிகழ்வு போலவே
பார்த்துவிட்டு பதில் சொல்லாமல் செல்பவர்கள் பலர்..
*******************************************
புத்தகத்தினை மட்டும் விட்டுவிட்டு
சிலர் தண்ணீர் புட்டிகள் கேட்பார்கள்
பலர் பாண் பராக் கேட்பார்கள்..
*******************************************
புத்தகம் விற்பதினை விட்டுவிட்டு
புண்ணாக்கு விற்றிருந்தாலும் தொழிலதிபர் ஆகியிருப்பேன்...