அண்ணல் நபி வழி நடப்போம்
குறள் உலகப் பொதுமறை
குர் ஆனிலும் உண்டு வாழுமுறை
எங்கிருந்த போதும்..
எதிலிருந்து வந்தாலும்..
நன்னெறிகள் சொல்லுகின்ற
நயமிகு போதனைகள்..
நமது நன்மைக்குதானே..?
இஸ்லாத்தின் கோட்பாடுகள்
இறைத் தூதர் அண்ணல் நபி
திரு குர் ஆன் அதன் மூலம்
காட்டிய பல நெறிகள் தம்மை
உலகத்தார் யாவருமே ஏற்றிடலாம்
மனித நேயத்தின் விளக்கங்களை..
ஆறு வயதில் அனாதை ..அண்ணல்
ஈராறு வயதிலேயே வியாபார செம்மல்
நேர்மையான குணவானாய் வாழ்ந்த
அண்ணலினை "அல்-அமீன்" என்றழைப்பர் !
ஹிரா மலைக் குகைகளிலே
அவர் இருப்பதுண்டு தவமே
வாரக் கணக்கில் பல ஆண்டுகளாய்
இறைவனது தேர்வெனவே முதல் செய்தி
கபிரியேல் வசம் தந்து
அண்ணலிடம் அனுப்பி வைத்த இறைவன்
ஆக்கி விட்டான் அண்ணல் நபியை தீர்க்கதரிசியாக!
அன்று முதல் அண்ணலுமே நன்னெறிகள்
பல கோர்த்து வந்தார் குர் ஆன் வடிவில்
ஒன்றே இறை ..மற்றேதுமில்லை
என்பதே அவர் அளித்த கோட்பாடு
பெண்களை மதி என்பது முதல்-இறைவனிடம்
பூரண சரணாகதி ஆகிவிடு என்பது வரை
எடுத்துக் கொண்டு இன்பமாய் வாழ
நெறிகள் எத்தனை ..எத்தனை!
நெறியான வாழு முறை ..நற்குணம்!
பிறர் அறியக் கூடாதென்று செய்யும்
செயல்கள் யாவும் பாவம் !..
சிரத்தினை அசைப்பதும் துதிப்பதும் மட்டுமே
நெறியானவர் செயல் அல்ல ..
இறையின் மீதும் இறுதி தீர்ப்பு நாளின் மீதும்
இறைத்தூதர் யாவர் மீதும் நம்பிக்கை கொண்டு
வாழ்தலும், இல்லாதவர்க்கு ஈதலும்,
அடிமைத்தனத்திற்கு சாவுமணி அடிப்பதும்,
கொடுத்த வாக்கினை காப்பாற்றுதலும் ,
நோய்மையிலும், ஏழ்மையிலும்,
போரிலும் பொறுமை காத்தலும்,
உண்மையுடன் வாழ்வதும் ,
சினத்தினை வெல்வதும், மன்னிக்கும் மனம்
கொண்டு இருத்தலும் என நீண்டு செல்லும்
..
அண்ணல் நபிகள்தம் அருளுரைகள்
ஏற்பதால் கோடி நன்மை..மானிடர்க்கு
புரிதலிலே வளரும் மானிடர் பண்பு
நல்ல மலர்களை ஏற்றிட வாசம் பொங்கும்
நபிகள் காட்டிடும் வழியினில் நன்மையே பெருகும்!
(நன்றி: நண்பர் கவிஞர் முகம்மது சர்பான் அளித்த தலைப்பிற்கும், தூண்டுதலுக்கும்..)