பாட்டியின் ஆன்மா

நான் சென்னையில் ஒரு தனியார் அலுவலகத்தில் வேலை செய்கிறேன். நான் வசிக்கும் வீடு 3வது மாடியில் அமைந்துள்ளது. ஒரு நாள் ஞாயிறு இரவு சாப்பிட்டுவிட்டு உறங்கிகொண்டிருந்தேன். ஜலதோஷம் பிடித்திருந்ததில் இருமல் கூட இருந்தது. அவ்வபோது இருமிக்கொண்டே புரண்டு புரண்டு படுத்திருந்தேன். திடீரென யாரோ கதவை தட்டும் சத்தம் கேட்டது. எழுந்து சென்று கதவை திறந்தேன். அங்கு நான் கண்ட காட்சி என்னை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.

எனது பாட்டி கையில் ஒரு மஞ்சப்பையுடன் வெளியில் நின்றுகொண்டிருந்தார். முகவரி தெரியாமல் சென்னையில் ஒரு படித்தவர் வந்தாலே கடினம். இவர் எப்படி வந்தார்னு குழம்பிய சிந்தனையில் இருந்தேன்.

ஆமா, "அப்பத்தா நீ எப்படி இங்க வந்தே?"ன்னு கேட்பதற்குள், ஏன்டா இவ்ளோ இருமல் இருக்கு உனக்கு ஏதாவது மருந்து எடுத்துருக்கலாம்ல. நீ சொன்ன கேட்க்க மாட்டே, இரு நானே உனக்கு கசாயம் பண்ணி எடுத்துவரேன்.
அதெல்லாம் வேணாம் அப்பத்தா. சமையலறை சென்று கசாயம் செய்து எடுத்துவந்தார். இந்தா இத குடி சரியாபோய்டும். இது என்னடா ஊரு, எப்படிதான் இங்கலாம் இருக்காங்களோ தெரியல.
ஒரு மரம் கூட கண்ணுல படல. வீட்டு ஓரமாவே சாக்கடை ஓடுது. எங்க பாத்தாலும் ஒரே தலையா தெரியுது. வீடுகள் எல்லாம் நெருங்கி நெருங்கி இருக்கு. என்னால லாம் ஒரு நாள் கூட இங்க தங்க முடியாதுடா.

அதெல்லாம் அப்படிதான் அப்பத்தா. நகரம்னா சும்மாவா. இங்க எல்லாரோட வாழ்கையும் இயந்திரதனமா தான் இருக்கும்.
அப்புறம் எதுக்குடா இங்க இருக்கே, பேசமா நம்ம ஊருக்கே போய் விவசாயம் பாத்துகிட்டு சந்தோசமா இருக்கலாம்ல.
நான் இதுக்கு தான் படிச்சேனா. எனக்கு விவசாயம் ஒத்துவராது அப்பத்தா. இதுக்கு ஏன்டா இவ்ளோ சிலுத்துக்கிரே. இப்போ இல்லாட்டியும் என்னிக்காவது ஒரு நாள் அங்க வருவேடா.
பேசிக்கிட்டே இருந்ததுல பாட்டி எப்படி வந்தாங்க அப்படிங்கற விசயத்த மறந்துட்டேன். ஒருவேளை என்னுடைய அப்பா இவரை அனுப்பி வச்சிருப்பாரோ, யோசிக்கவேண்டாம் அவரிடமே கேட்டு தெரிஞ்சிக்குவோம்.

எனது கைபேசியை எடுத்து அழைத்தேன். அப்பா, எப்படி இருக்கீங்க? ஆமா பாட்டி வர விசயத்த ஏன் என்கிட்ட நீங்க முன்னாடியே சொல்லல?
பாட்டியா, என்னடா ஏதாவது கனவு கண்டியா? ஏன் இப்படி உளர்றே. பாட்டி இறந்து இன்னியோட 2 வருஷம் ஆகுது.
கண்டத மனசுல போட்டு குழப்பிக்காத. இல்லப்பா நான் இவ்ளோ நேரம் அவங்ககிட்ட தான் பேசிகிட்டு இருந்தேன்.
அவங்ககிட்ட பேசுங்க நான் அவங்கள கூப்பிடுறேன். நான் திரும்பி பார்த்தேன் யாரும் அங்கு இல்லை. இதய துடிப்பு முன்பைவிட சற்று அதிகமாக துடிக்க ஆரம்பித்தது. முகம் வியர்த்து கொண்டிருந்தது.

அப்பத்தா..அப்பத்தா...அப்பத்தா..
கூப்பிட்டும் எந்த பதிலும் இல்லை. உடம்பெல்லாம் நடுங்க ஆரம்பித்தது.
யாரோ என் பின்னால் கை வைப்பது போல் இருந்தது. அரைகுறையாக ஒரு குரல் என் காதில் விழுந்தது. ஆம் இப்பொழுது அழகாக புரிகிறது அந்த குரல்...

"எவ்வளவு
நேரம்டா கூப்டறது? எந்திரிக்கவே மாட்டேன்குறே.."சீக்கிரம் எழுந்திரு. இன்னிக்கு பாட்டியோட 2வது தெவசம்.. அதுக்கு தான் உன்னை ஆபிஸ் லீவ் போட்டுட்டு ஊருக்கு வர சொன்னேன். நீ என்னடானா இப்படி தூங்குறே" அம்மாவின் குரல். உறக்கத்திலிருந்து கண் விழித்து விட்டேன்.. எதுவும் புரியாமல் பாட்டி புகைப்படத்தை பார்த்தபடியே அங்கிருந்து நகர்ந்தேன்..

எழுதியவர் : Raj De Inno (24-May-15, 4:02 pm)
சேர்த்தது : ராஜ்
Tanglish : paattiyin aanmaa
பார்வை : 334

மேலே