புத்தக மூட்டையின் புலம்பல்
ஏற்றிவிட்ட ஏடென்னை ஏறெடுத்தும் பாராமல்
சீற்றமுடன் சீண்டாமல் செல்கின்றீர்- தேற்றிட
யாருமின்றி மூட்டைக்குள் ஏங்கிக் கிடக்கின்றேன்
கோருகிறேன், என்துயர் கொல் .
உண்ணும்போ தும்நீர் உறங்கிடும் போதிலும்
நண்பன்போல் என்னை நடத்தினீர் - கண்ணிமைப்போல்
காத்திட்டீர், இப்போதென் கைங்கர்யம் வேண்டாமோ
ஆத்தாடி! என்னே,நும் அன்பு .
கணினிமய மானப்பின் கட்டிவிட்டீர் மூட்டை
திணித்ததுடன் விற்றிடவும் திட்டம் - மணியாய்
இணையமுடன் கைகுலுக்கி இன்பமுடன் சென்றீர்
துணைவருவேன் என்றும் தொடர்ந்து .
புத்தக மூட்டையென்ன பூமிக்குப் பாரமோ
சத்தமின் றிச்சொல்வீர் சான்றோரே - உத்தமராய்
ஆக்கிய தற்கிதுவே அன்பளிப்போ? துக்கமும்
ஏக்கமும் வாட்டுதே இன்று !