பழுதின்றிக் காக்கும் பரம்

போட்டியில் பங்கேற்கும் பொன்னான வாய்ப்பினை
ஊட்டமுடன் வட்டத்தில் ஊட்டினரே ! - நாட்டமுடன்
நற்படைப்பை நல்கவே நாமிங்கே கூடிட
கற்கலாம் நாளுங் கவி .

கவினுறு பல்கலைகள் கண்டிங்குப் போற்றி
அவிழா அரும்பாய் அழகாய்ப் - புவியில்
தடாகம் முளைத்திட்டத் தாமரையாய்ப் பூக்க
விடாமல் தொடரும் விருந்து .

விருந்தும் படைக்கும் விருதும் கொடுக்கும்
அருந்தமிழ் ஆர்வத்தால் அள்ளி ! -பெருமைமிகு
செம்மொழியைப் போற்றிடும் சீரும் சிறப்புமாய்க்
கம்பீர மானக் களம்.

களத்தினிலே நித்தமும் கற்கண்டுப் பாக்கள்
வளமான சொற்களில் வாழும் - இளமைத்
ததும்பும் தடாகத்தில் தாமரைகள் ஆட
மதுவம் இசைக்கும் வரம் .

வரமாய்க் கிடைத்திட்ட வட்டம் வளர்ந்துத்
தரமாய்ப் படைப்பைத் தருமே !- சிரத்தையாய்
மண்ணில் தடாகம் மகிமை யடைந்திட
வண்டமிழில் வாயார வாழ்த்து .

வாழ்த்தும் பலித்திடும்; வட்டம் விரிந்திடும்
தாழ்த்த நினைத்தால் தகர்த்திடும் - வாழ்நாள்
முழுதும் தடாகம் முழுமதியாய் மின்னும்
பழுதின்றிக் காக்கும் பரம் .

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (1-Jun-15, 10:38 am)
பார்வை : 51

மேலே