விவசாயத்தொழிலாளி
விவசாயத்தொழிலாளி
பாவலர் கருமலைத்தமிழாழன்
நிலமொன்றே வாழ்க்கையென்று நிதமு ழைத்தே
நிலைத்தகாப்பாய் காய்காய்த்த உள்ளங் கைகள்
வலம்வந்து வலம்வந்து பயிர்வ ளர்ந்த
வளம்கண்டு மகிழ்ந்திட்ட பசித்த கண்கள்
களம்சுற்றித் தானியங்கள் அடித்துச் சேர்த்துக்
கலம்நிறைத்துத் தந்திட்ட வெறுமை வயிறு
நலமனைத்தும் பிறர்க்களித்துக் கோவ ணத்தில்
நடமாடும் வெள்ளைமனக் கறுத்த மேனி !
நாய்பிடித்து நடைபயிற்சி செல்லு கின்ற
நகரத்து மக்களினை வாழ வைக்கத்
தாய்அணைக்கும் குழந்தையெனக் கலப்பை தோளில்
தாங்கிச்செங் கதிர்முன்னே நடந்து சேல்வோன்
வாய்சுவைக்க நட்சத்திர விடுதி தன்னில்
வகைவகையாய் உணவுகளை உண்ப தற்குக்
காய்ந்தஊறு காய்தொட்டுச் சோற்று நீரை
காண்அமுதாய் தான்பருகி அளிக்கும் தோழன் !
இயற்கைஉரம் தந்தமரக் காட்டை வெட்டி
இருந்தஉயர் மலைதகர்த்து மழைவி ரட்டி
வயல்வெளியை ஏரிகளை மனைக ளாக்கி
வாழ்ந்தவரை வெளியேற்றி விற்ற பின்னே
உயர்உழவன் பின்னிந்த உலகம் என்றே
உன்னதமாய்ப் போற்றிட்ட உழவன் இன்றோ
அயலூரில் கூலிகளாய் உழைக்கச் சென்றே
அடிப்பட்டும் உதைப்பட்டும் சாகும் அவலன் !