பிரியா விடை
அன்னைபோல் எம்மீது
அக்கறைக் கொண்டாய் ,
தந்தைபோல் எமக்கு
தைரியம் தந்தாய்,
குருவாய் கொஞ்சம்
கோபமும் கொண்டாய்
கொண்ட கோபம் அனைத்திலும்
அன்பையே ஆதாரமாய் வைத்தாய் !
நாங்கள் மலர்களாய்
விண்தொட்டோம்
நீ வேறாய்
மண்புதைந்ததால் !
நாங்கள் கல்வி
முத்தேடுத்தோம்
நீ களைப்பின்றி
மூச்சடகியதால் !
கணிதத்தின் கடினத்தை
உம் கரம் பற்றியே
நாங்கள் கடந்தோம்
வானளவு உயர்ந்தாலும்
வாகை பல சூடினாலும்
யாம் கர்வம் கொள்வதென்னவோ??
உம் மாணவர் என்பதில் மட்டுமே …
எங்கள் கனவுசிற்பம்
உறுபெற
நீயே உளியாய்
உடன் வந்தாய்
உளி தந்த வலி
ஒளிக்கான வழி
என்பதை
இப்போது உணர்கிறோம்...
எத்தனையோ
இன்னல்களில்
உடன் வந்த நீ
இன்று
பிரிவுப் பேரலையில்
உம் பிள்ளைகளை
தனியே விடலாமா ??
காலத்தின்
கணம் அறியாதவர்கள்
நாங்கள்
உம் பிரிவால்
இன்று நிமிடத்தின்
நீளம் உணர்கிறோம்...
உம்மீது கோபம்தான்
உம்மீது வருத்தம்தான்
அன்னையைப் பிரிகையில்
எந்தக்குழந்தை
ஆனந்தமடையும் ???