சாதீய சாத்தான்கள்o0oநீயும் நானும் யாரோ இன்று நினைவில் வாழக் கற்றது நன்று-போட்டிக் கவிதை

சாதீய சாத்தான்கள்...
==================

நீயும் நானும் யாரோ இன்று
நினைவில் வாழக் கற்றது நன்று
என்று சமாதானப் பட்டுக் கொள்ள
ஏனோ இயலவில்லைதான்....

காதலை திருமணத்தில் தொடர நினைத்து
உறவுகளிடத்தில்
காதலை உடைத்தபோது
எவ்வளவு எளிதில் கூறிவிட்டார்கள்
"மறந்து விடுங்கள்" என்று..

சா"தீ"யும், வச"தீ"யும்
அல்லவா நம் காதலை சுட்டெரித்தது??

வீணையின் தந்திகளை அறுத்தெறிந்துவிட்டு
மாட்டுத் தோல் பொருத்தி
சாதிப் பறையடிக்கும்
சாத்தான்களின் கூட்டம்...
சாதியை ஓதிக் கொண்டு
என்ன சாதிக்கப் போகிறது??

என் உயிரான என்னவனை
துடி... துடிக்க அல்லவா
என்னை விட்டுப் பிரித்துவிட்டது .
சாதீய சாத்தான்கள்...

நான் உயிர் வாழ்வது
எவ்விதம் சாத்தியம்??
அவனைப் பிரிந்த நாள்முதலாய்
நான் நடைப்பிணமாய்...

நினைவுகளில் வாழக் கற்பதாமே
எப்படி வாழ்வது???

அவன் நினைவுகளின் உச்சம் தொடும்
நேரங்களில் எல்லாமும்
இதோ இந்த துன்பச் சித்திரத்தை
தீட்டுகின்ற தருணத்திலேயும்
என் விழிகளிரண்டில் கண்ணீர் முட்கள்
தைத்துவிட்டுப் போகாமலில்லை...

சாத்தான்களை எதிர்த்து
சாதிக் கம்பிகளை உடைத்தெறிவான்
என்னவன் ஓர் நாள்....

சாத்தான்களின் சிறையில் வாடும்
இந்த சம்யுக்தையை
சிறை மீட்டுச் செல்வான்
என்கிற நம்பிக்கையில் காத்திருக்கிறேன்
என் ப்ரித்விராஜனுக்காய்...

எழுதியவர் : சொ.சாந்தி (13-Jun-15, 11:21 pm)
பார்வை : 150

மேலே