நீயும் நானும் யாரோ இன்று நினைவில் வாழ கற்றது நன்று
அன்றொருநாள் அந்தி மாலைப் பொழுதினில்
தென்றல் வந்து வீச மல்லிகை வாசம் பரப்ப
குளத்தடி பிள்ளையார் கோவிலில் நாம் சந்தித்தோம்
அது ஒரு தற்சையல் சந்திப்பே அன்றோ -ஆம்
அன்று என்னை நீ அறியாய் உன்னை நான் அறிந்திலேன்
கண்ணும் கண்ணும் கலந்தபின்னே பிரிந்தோம்
சந்திப்பு தொடருமா தெரியாது அப்போது !
அன்று எங்கள் கல்லுரி அலுவலகத்தில் மீண்டும்
உன்னை சந்திக்க நேர்ந்தது ஆண்டவன் செயலா
நான் அறியேன் இருக்கலாம் என்றே நினைத்தேன்
இன்றைய சந்திப்பில் எங்கள் கண்கள் வார்த்தைகள்
பரிமாறிக் கொண்டனவே ! இதழ்களில் புன்னகை
சந்திப்பு அக்கணமே காதலாய் மாறியதே!
மெல்ல மெல்ல அரும்பிய அக்காதல்
எங்கள் வீட்டினரின் கவனத்திற்கும் வந்திடவே
கல்லுரி படிப்பு முடிந்த பின்னே திருமணத்தில்
வந்து முடிந்தது !
காலமும் வெகு வேகமாய் சுழன்றது
எங்கள் வாழ்க்கைப் பயணமும் இனிதாய்
பரஸ்பர காதலோடு பயணித்தது - பிள்ளைகள்
பெற்றெடுத்தோம் செவ்வனே வளர்த்தோம்
நல்ல படிப்பும் பாங்கான வாழ்விற்கும் வழி
வகுத்து தந்தோம் -காலம் வந்தது பிள்ளைகளும்
கூட்டை விட்டு பிரிந்து தனிமை நாடி
பறந்து சென்ற பின்னே - மீண்டும் நாங்கள்
இருவராய் பழைய காதலராய் இருப்பது உணர்ந்தோம்
காலம் காலனை மாறியது ஒரு நாள் -இது
காலம் செய்யும் கோலமே ஆனால் அதில்
என்னருமைக் காதலி என் மனைவி என்னைவிட்டு
பிரிந்து சென்றாள் -சென்றவள் மனதிலே நிற்கின்றாள்
இன்றளவும் -ஆம் அன்று அந்த அந்தி மாலை சந்திப்பு
மலரும் நினைவாய் மனதில் நிறைந்து இன்றளவும்
என்னை வாழ வைக்கிறதே இது என்ன
தெய்வீக உறவல்லவா இனிய நினைவே !