விழிநீரில் நனைகின்ற தமிழினமே

விழிநீரில் நனைகின்ற தமிழினமே-உன்
விடியலைக் காணும் நாள் வருமா?
உதிரத்தில் நனைகின்ற தாயகமே-உன்
உறவினை சுமக்கும் நாள் வருமா?

கண்ணீர் காயவில்லையே
காலங்கள் இனிமையில்லையே
காயங்கள் ஆறவில்லையே
கடவுள்கூட இரங்கவில்லையே

தாயக காற்றிலே ஈரம் இல்லையடா
தமிழனின் நிலையோ பாவத்தின் எல்லையடா
பறக்கும் பறவைக்கு சிறகுகள் முறியுதடா
பிறக்கும் சிசுவுக்கு உயிரே இல்லையடா

குயிலின் ராகமும் குண்டுச்சத்தம் ஆனதடா
குழந்தையின் முறுவல் ஊமையாக மாறுதடா
கடலின் மடியில் தீப்பந்தம் எரியுதடா
கவலையின் பாதையில் தமிழினம் செல்லுதடா

தமிழரின் வாழ்க்கை இருளில் கழியுதடா
தரணியின் பார்வை ஒருசதம் உதவலடா
குண்டுமழை மாரியாக தினமும் பெய்யுதடா
ஓய்ந்த சத்தங்கள் இதுவரை கேட்கலடா

எறிகணை உரசலில் உடல்கள் சிதறுதடா
உயிரும் உறவும் ஒன்றாய் மடிந்ததடா
படித்த பள்ளிகளும் பதுங்குகுழி ஆனதடா
பதுங்கிய இடத்திலும் ஒருஉயிர் எஞ்சலடா

எழுதியவர் : உடுவையூர் தர்ஷன் (12-May-11, 4:16 am)
பார்வை : 353

மேலே