நீயும் நானும் யாரோ இன்று நினைவில் வாழக் கற்றது நன்று போ ட்டிக் கவிதை
வெள்ளி நாடாவாய் நாடெங்கும் விரியும்
நிலா ஒளிச் சாலை தன்னில் –உன்னை
அள்ளி அணைத்திடவே நானங்குப் பாய
துள்ளித் தப்பிச் செல்வாய்.
பின்னையொரு நாளில் பாரடங்கி ஊரடங்கி
உறைந்து விட்ட ஊமை இருளில் – நீ
சிறைப்பிடி என்னையென்று நெருங்கி வந்து
சிருங்காரம் செய்து சென்றாய்.
பெருங்காட்டில் தனியே தெளிவாய் தெரியும்
இலையுதிர் நெடுமரமாய் நிற்க-முகந்தொட்டு
“இதயத்தை உன்னிடமே விட்டு விட்டு
செல்கின்றேன்” என்று மறைந்தாய்
பதமாம் அச்சொல்லை இதமாய் நான்நம்பி
நிதமும் காத்து இருந்தேனே— கடந்த
முப்பத்தி ஐந்து ஆண்டுகள் கழிந்தும்
அப்பழுக்கு இல்லை என்பேன்
எல்லாம் முடிந்தும் ஏக்கம் அழியாமல்
கல்லாய் சமைந்து விட்டேன் – நீயோ
எல்லாம் விதியென மீதிக் கதையதை
சொல்லாமல் சென்று விட்டாய்..
சோகச் சுமைகளைத் தாங்கித் தடுமாறும்
யோகமில் வண்டி மாடாய் –அசைபோட்டு
போகுமிடம் தெரியாமல் போனவழி புரியாமல்
நோகுதென் நெஞ்ச மென்பேன்.
நீயும் நானும் யாரோ இன்று
நினைவில் வாழக் கற்றது நன்று.