நீயும் நானும் யாரோ இன்று நினைவில் வாழக் கற்றது நன்று
நீயும் நானும் யாரோ இன்று?...
நினைவில் வாழக் கற்றது நன்று…
கண்ணீர் துளிகளை சோகத்தில் மென்று
கடந்து கொண்டிருக்கிறேன் நாட்களை தின்று...
எத்தனை எத்தனை வார்த்தைகள் வீசி
என் மௌனத்தை கலைத்து
சிரிக்க வைத்தாய் அன்று ...
இன்று அத்தனை வார்த்தைகளும்
உன் நினைவினை பேசி
ரணமாய் தவிக்க வைக்கிறது
என் கண்முன் நின்று...
அது கனவென என் கற்பனையென
ஆகாதோ என்று
நித்தம் நித்தம் என் தொண்டைக்குள்
சிக்கிய சோகத்தின் எச்சிலை
விழுங்கிகொண்டிருக்கிறேன் பேதையாய் இன்று...
உன்னை போல் ஒருவனும்
இங்கே அன்று என
அன்று நான் சிலிர்த்த
நிமிடங்கள் தீக்குழம்பாய் சுடுகிறது
என் நெஞ்சத்தில் நின்று...
காரணம் புரியாமல் பிரிவொன்று
கண்டு காரணம் செய்து
அதை நியாயபடுத்தி கொண்டிருக்கிறேன்
நம் காதலை சிசுவென கொன்று...
கடந்தவை நடந்தவை என
அத்தனையும் நன்று தான் என்று
என் மனதை பக்குவபடுத்திகொள்கிறேன்
நான் புதைத்து வைத்த நம்
அன்றைய காதல் நினைவுகளை வென்று...