அப்பா அப்பா

கோயில் திருவிழாக்களில்
தொலைந்திடுவேனோ என்று
தோள் மீது
தூக்கிக் கொள்வாய் !
தேரில் வந்த சாமியைக் காட்டிய
சப்பர சாமி நீ !

பேருந்துப் பயணங்களில்
உன் மடியில் தலை சாய்க்க
அசையாமல் அமர்ந்திருப்பாய்
துயில் கலையக் கூடாதென்று !

பசியைக் குறிப்பாலறிந்து
பிடித்த மசால் தோசை
வாங்கித்தருவாய்
நான் சாப்பிட
காபி மட்டும் உனக்கு
அதிலும் பாதி எனக்கு
ருசி பார்க்கவென்று !

படிக்கும் போது கேள்வி கேட்பாய்
தெரியாத கேள்விக்கு
தெரிந்த பதிலை
மடமடவென சொல்வேன்
மகிழ்வாய் நீ ...
ஏமாற்றிய நெருடல் இருந்தாலும்
தப்பித்த சந்தோஷம் என்னுள் !

நீங்கா நினைவுகளுடன்
விண்ணில் வாழும் உன்னை
அண்ணாந்து பார்த்துக் கேட்கிறேன் ...
இன்ப துன்பங்களில்
என் கூடவே இருப்பாய்
அரூபமாக .... அப்பா ..... அப்பா ....!!

எழுதியவர் : ராஜ லட்சுமி (22-Jun-15, 12:15 am)
சேர்த்தது : rajipappa
Tanglish : appa appa
பார்வை : 113

மேலே