மாற்றுத்திறனாளி இவன் மாற்றும்திறனாளி

என்பத்தி மூன்றில் பிறந்தேன்
இன்னும் தவழும் குழந்தை நான்
இறைவன் எழுதிய கவிதையில்
எழுத்துப் பிழையாய் நானோ?
குயவன் செய்த பானையில்
குறையாய் இங்கு நானோ?
படைப்பவன் பிழை செய்தால்
பாவம் நான் என்ன செய்வேன்?

கனம் தாங்கும் வரை
கண்ணீருடன் சுமத்தாள் அன்னை
எடைக் கூடினாலும் எனை
இன்றும் சுமக்கும்  தந்தை
தோளில் சுமத்த தோழர்களை
அன்பால் சுமக்கும் சொந்தங்களை
நினைக்க நானும் மறந்ததில்லை

ஆழக்கிணறு கண்டதில்லை
ஆற்றில் ஆடிக் குளித்ததில்லை
ஆலவிழுதில் ஆடியதில்லை
ஆசைதீர ஓடியதில்லை
மரத்தின் உச்சி தொட்டதில்லை
மலைகள் ஏறி மலைத்ததில்லை
இருந்தும் கவலை கொண்டதில்லை

என் கால்கள் பயணம் கண்டதில்லை
களைத்து நானும் இளைத்ததில்லை
தினம் கனவில் நானும் பயணம் செய்து
இனி கவியில் நடக்க துடிக்கின்றேன்

எழுதப் படிக்க கற்றுக் கொண்டேன்
இவ்வுலகம் கொஞ்சம் அறிந்து கொண்டேன்
முகம் சுளிக்கும் மூடர் கண்டேன்
முகம் மலரும் மனிதமும் கண்டேன்

பிழைக் கவிதை எழுதியவன்
பெண்ணவளை அனுப்பி வைத்தான்
புதுக்கவிதை நீங்களென புதியவளை பேச வைத்தான்
அன்னையின் மறுவுருவாய் அவளைதான் பார்க்க வைத்தான்
அன்பிற்கு இலக்கணமோ என்றென்னை வியக்க வைத்தான்

நான்கு பத்து மாதங்களாய்
மனைவி என்று மொழியுரைத்தவள்
மனம் மாறச் செய்தானோ-எனை
மனம் வாடச் செய்தானோ
எத்தனை வலி கடந்திருப்பேன்
இவ்வலியும் கடப்பேனோ?
இல்லை இறுதிவரை சுமப்பேனோ?

உடல்வலி போதாதென்று உள்ளவலிக் கூட்டினாலும்
உடைந்து நானும் போக மாட்டேன்
உயரம் இன்னும் பறப்பேன்-என்
துயரை எல்லாம் துறப்பேன்

பிறைநிலா ஒன்றும் குறையல்ல அது
பௌர்ணமியின் பயணம்தான்
நிறைநிலா ஒன்றும் புனிதமல்ல
அதிலும் சிறு கலங்கம்தான்

செல்கள் எல்லாம் செத்து செத்து
செயல் இழக்கும் உறுப்பகளில்-என்
சிந்தை என்றும் சாகாமல்
சில கவிதைகளின் கிறுக்கல்களில்

என் உடற்திடம் குறைவுதான் ஒத்துக்கொள்கிறேன்
ஆனால்
மனத்திடமோ மலையளவு மார்த்தட்டுகிறேன்

என்மீது தூவும் இகழ்வெல்லாம்
விதைமுகம் தூவும் மண்போல
விதைகளும் வீருகொள்ளும்
விருட்சமாய் நாளை வெல்லும்

இனி
கானகம் முழுதும் நான் நடப்பேன்
கவிதை கனிகள் தினம் பறிப்பேன்
ஆழக் கடலில் தினம் நடந்து
கவிதை முத்துக்கள் கோர்த்திடுவேன்
நீலவானில் நான் நடந்து
கவியால் நிலவை கடத்திடுவேன்

என் கால்களை முடக்கம் செய்யலாம்
எழுதும் கைகளை முடக்கம் செய்யலாம்
இறக்கும் வரை முடியாது
என் நம்பிக்கையை முடக்கம் செய்ய..

ஆமாம்..
இறக்கும் வரை முடியாது யாரும்
"என் நம்பிக்கையை முடக்கம் செய்ய"

எழுதியவர் : மணி அமரன் (22-Jun-15, 2:56 pm)
பார்வை : 458

மேலே